பொதுத்துறை மற்றும் பெரிய நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி பாக்கி

* 45 நாட்களில் வழங்க நடவடிக்கை

* மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசு துறைகள், பெரிய நிறுவனங்கள் வழங்க வேண்டிய தொகை 5 லட்சம் கோடி பாக்கி உள்ளது என மத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கியை  45 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.  கொரானா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. விவசாயம், ஆட்டோமொபைல் துறை போல, மிக அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைதான். இதன்மூலம் சுமார் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எம்எஸ்எம்இ எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், சராசரியாக ஒரு தொழிலில் 2 பேருக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

 சில வளர்ந்த நாடுகளில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்தால் அவற்றுக்கு நேரடியாக சம்பள மானியம், கூடுதல் கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நலிவடைந்த சிறு தொழில்களை கண்டறிந்து, அவர்களுக்கு பலன் கிடைக்கச் செய்வதே சவாலாக உள்ளது. எம்எஸ்எம்இக்களுக்கு மிகப்பெரிய சிக்கல், நிதிப்பற்றாக்குறைதான். அரசு தரப்பிலும் ஜிஎஸ்டி ரீபண்ட்கள் தாமதம் ஆகின்றன. அதற்குள் பணத்தை புரட்டவும் தொழிலை நடத்தவும் சிரமப்படுகின்றனர். அதோடு, பெரிய தனியார் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் கூட சிறு, குறு தொழில்துறையினருக்கு தரவேண்டிய தொகை நிலுவையில் உள்ளது.

 சில வாரங்களுக்கு முன்பு இதுபற்றி குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தொழில் நடத்தவே போராடுகின்றன. எனவே, பெரிய தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்கள், எம்எஸ்எம்இக்களுக்கு ஒரு மாதத்துக்குள் நிலுவை தொகையை வழங்க வேண்டும். இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.  இந்நிலையில், அரசு நிறுவனங்களே குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ₹5 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:

 மாநில அரசு துறைகள், மத்திய அரசு ஏஜென்சிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறையினர் அனைவரும் சேர்த்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு  5 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளனர். மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கியை 45 நாட்களில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல், மாநில அரசுகளும், தங்கள் துறைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வைத்துள்ள நிலுவையை விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

Related Stories: