ஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்

சண்டீகர்: ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற இந்திய அணிக்காக விளையாடிய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர் காலமானார்.  இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பல்பீர் சிங் சீனியர் (95). பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்த  இவரது  தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர்.   சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டில் அபார திறமை கொண்ட  பல்பீர் சிங் 1948ல் லண்டன் , 1952ல் ஹெல்சிங்கி,1956ல் மெல்போர்ன் என தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர்.

பல்பீர் சிங் சீனியர் தேசிய அணிக்காகவும் பஞ்சாப் மற்றும் பஞ்சாப் போலீஸ் அணிகளுக்காகவும் தொடர்ந்து விளையாடி உள்ளார். 1975ம் ஆண்டு உலகக் கோப்பை  ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்ததில், ஆலோசராகவும் மேலாளராகவும் இவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. ‘மனதளவில் சோர்வடைந்திருந்த இந்திய வீரர்களுடன் பல்பீர் தனித்தனியே பேசி புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தார். அதன் காரணமாகத் தான் எங்களால் உலக கோப்பையை முத்தமிட முடிந்தது’ என்று அப்போதைய கேப்டன் அஜித் பால் சிங் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

நவீன கால  தயான்சந்த் என்று புகழ்பெற்ற பல்பீர், பத்ம உள்பட பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார். ஓய்வுக்குப் பிறகு சண்டிகரில் உள்ள மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்தார். மே 8ம் தேதி கடுமையான காய்ச்சல், மூச்சு பிரச்னை காரணமாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் பிரபலங்கள், ஹாக்கி வீரர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் அதன் தலைவர் ஒலிம்பியன் வி.பாஸ்கரன், பொதுச் செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

Related Stories: