கிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்ட காவல்துறை ஆணையாளர் ரவீந்தர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வாரங்கல் மாவட்டம், கீசிகொண்டா மண்டலம், கீர்த்திநகரில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், தனது மனைவி நிஷா, அவரது அக்கா மகள் ரபிகா, அவரது மகள் மற்றும் 2 மகன்களுடன் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். ரபிகாவுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார்(40) என்பவருக்கும் ரபிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறி தனித் குடிதனம் செய்து வந்தனர்.

 இந்நிலையில் ரபிகாவின் மகளுடன் சஞ்சய்குமார் தவறாக நடக்க முயன்றார். இதனையறிந்த ரபிகா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தற்போது தனது மகளுடன் நெருங்கி பழகுவது சரியானது அல்ல என ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் சஞ்சய்குமார், தனக்கு இடையூறாக உள்ள ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த மார்ச் 7ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள உறவினர்களிடம் சென்று பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி வாராங்கலில் இருந்து கரீபிரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரபிகாவை, சஞ்சய்குமார் அழைத்துச் சென்றார்.

 தொடர்ந்து, இரவு மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ரபிகா தூங்கியபோது ராஜமகேந்திரவரம்  அருகே அவரின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து வாராங்கல் திரும்பி உள்ளார். ரபிகா கொலையான சில நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சஞ்சய்குமாரிடம் தனது அக்கா எங்கு சென்றார், உன்னுடன் தானே வாழ்ந்து வந்தார் எங்கு உள்ளார் என நிஷா கேட்டார். அதற்கு சஞ்சய் பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறி வந்தார். ஆனால் இதனை நம்பாத நிஷா, உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் செய்வதாக கூறினாராம். இதனால் நிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய சஞ்சய்குமார் திட்டமிட்டார்.

இந்நிலையில், மசூதின் பெரிய மகனுக்கு கடந்த 21ம் தேதி பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடினர். இதில் பங்கேற்ற சஞ்சய்குமார் ஏற்கனவே திட்டமிட்டபடி  தூக்க மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து அவர்களுக்கு வழங்கினார். அப்போது, அந்த தொழிற்சாலை அருகே இருந்த பீகாரை சேர்ந்த மற்ற  3 இளைஞர்களுக்கும் குளிர்பானத்தை வழங்கினார். இரவு 12.30 மணியளவில் எல்லோரும் மயங்கிய பின்னர் ஒவ்வொரு வரையும் கோணிப்பையில் வைத்து கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக வைத்து, 6 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 72 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர் என்றார்.

Related Stories: