×

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மண்ணோடு மண்ணாகிய பரிதாபம்: கார்ப்பரேட் காசு பார்க்கும் மத்திய அரசு

* புத்துயிர் கொடுக்காத பலனற்ற திட்டங்கள்

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது, காலங்கள் பல கடந்தும் உண்மையாகவே இருக்கிறது. விவசாயத்துக்கு உருப்படியாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்ற வேதனை விவசாயிகள் மத்தியில் காணப்படுகிறது. இந்த முறையும் எதிர்பார்ப்பு பொய்த்து போய்விட்டது என்கின்றனர் விவசாயிகள்.
20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களில் கிசான் கடன் அட்டை மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.  விவசாய கட்டைப்பு மேம்பாட்டுக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு, கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக 13,343 கோடி ஒதுக்கீடு: 53 கோடி கால்நடைகளுக்கு 100% தடுப்பூசியை உறுதி செய்ய நடவடிக்கை, தேன் கூட்டு வளர்ப்பிற்கு 500 கோடி ஒதுக்கீடு.

10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் 5000 கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். மேலும் கூடுதல் உற்பத்தியாகும் இடத்தில இருந்து தேவையுள்ள இடத்திற்கு கொண்டுசெல்ல 50% போக்குவரத்து மானியம் மற்றும் காய்கறி, பழங்களை சேமித்து வைக்க 50% மானியம் வழங்கப்படும்.  அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள், பழங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்து, பருப்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

 மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. இவற்றால் நேரடி பலன் என்பது சாத்தியமில்லை. உண்மையில், வங்கிக்கணக்கில் நேரடி பண உதவி தான் உண்மையான பலன் தரும் என்கின்றனர் விவசாயிகள்.
 மேலும், இந்தியாவில் உள்ள 14.5 கோடி விவசாயிகளில் 12.56 கோடி சிறு குறு விவசாயிகள். மத்திய அரசு அறிவித்தபடி வேளாண் நிதி ஒதுக்கீடு போக மீதியில் 40.7 சதவீத அளவுக்கு தான் வங்கி கடன் கிடைக்கும். அதுவும் சிறு குறு விவசாயிகளுக்கு கடன் கிடைக்குமா? என்றால் கேள்வி குறிதான். 2 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள், குறுவை பட்டம் அல்லது சம்பா பருவம் என்றாலும் அந்த நேரத்தில் கை, காதில் உள்ள நகைகளை வங்கியில் அடமானம் வைத்து தான் சாகுபடியை துவங்குவார்கள்.

இதில் கதிர் வரும் ேநரங்களில் புயல், மழை, வெள்ளம் வந்தாலும், புகையான் நோய் தாக்கினாலும் விவசாயிகளுக்கு கையில் பதர் தான் கிடைக்கும்.  தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நகைகளுக்கு நகைக் கடன் வட்டி தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் கடன் கொடுப்பது அந்தந்த வங்கிகள் எடுக்கும் முடிவு. இவ்வளவையும் மீறி கடன் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என கூறப்படுகிறது.  இந்த பொருளாதார சலுகை திட்டமானது, ஏற்கனவே இருக்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் இருக்கிறது. மொத்தத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டங்களால் விவசாயிகளுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. நேரடியாக விவசாயிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

‘கங்கைக் கரை’ நிதியை கடைநிலைக்கு தரலாமே?
4 ஆயிரம் கோடியை மூலிகை வளர்ப்புக்கென கங்கை, யமுனை கரைப்பகுதிகளுக்கு ஒதுக்குவதாகச் சொல்கின்றனர். நம்மூர்களில் பழங்குடியினர், மலைவாழ் மக்களே மூலிகை வளர்ப்பை அதிகம் செய்கின்றனர். அவர்களுக்குக் கொடுத்தால்தானே பயன்? ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றன. கங்கைக்கரையில் மூலிகை வளர்ப்பை ஊக்குவிப்பதால் பெரிய நிறுவனங்கள் பலன் அடையலாம். இதற்கு பதிலாக, மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதியில் இதை ஊக்குவித்தால், கடை நிலை மக்களுக்கும் பலன் போய்ச்சேர வாய்ப்புகள் உள்ளன என்பது, மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள அப்பாவி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறைந்த வட்டியில் நகைக்கடன்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள், தேசிய வங்கியில் தங்களது நகைகளை அடமானமாக வைத்து ஒரு லட்ச ரூபாய்க்கு 7 சதவீத வட்டி செலுத்துவார்கள். ஓராண்டுக்குள் கட்டினால் 3 சதவீதம் மானியம் கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு லட்ச ரூபாய்க்கு 4 ஆயிரம் தான் வட்டி ஆகும். இந்த திட்டத்தின் மூலம் வட்டி கடைக்காரர்கள் பயன் பெறுகிறார்கள் எனக்கூறி இந்த திட்டத்தையே மத்திய அரசு 6 மாதத்துக்கு முன்பு ரத்து செய்துவிட்டது. எனவே, விவசாயிக்குதான் நேரடி பலன் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்த சிட்டா அடங்கலை வங்கியில் கொடுக்கச் செய்யலாம். இதுபோன்ற சில மாற்றங்களை செய்து திட்டத்தை புதுப்பித்து கொண்டு வந்தால் கடன் கிடைப்பதும் எளிதாகும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஆன்லைன் முறை சாத்தியமில்லை
‘மைக்ரோ புட் எண்டர்பிரசைஸ்’ என்ற வகையில் சிறு விவசாயிகளின் உணவுப்பொருட்களை உலகளவில் கொண்டு போய் விளம்பரம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. ஆனால்,  உண்மையில் எந்த விவசாயியும், தனது பொருட்களை உலகளவில் சென்று விற்பதில்லை. வியாபாரிதான் வாங்கிச் சென்று விற்பார். ஆன்லைனில் விற்பதோ, விளைவித்ததை பதப்படுத்தி பாதுகாத்திட தனி தொழிற்சாலை ஆரம்பிப்பதோ விவசாயிக்கு சாத்தியமில்லை.

புதிது போல் அறிவிக்கப்பட்டபட்ஜெட் திட்டம்
கால்நடைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவைகளுக்கென தேசிய விலங்குகள் நோய் கட்டுப்பாடு திட்டத்திற்கு தொகை அறிவித்துள்ளனர். இது புது திட்டமில்லை. ஏற்கனவே இருக்கும் திட்டம். 2019, செப்டம்பர் 11ம் தேதி இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 12,652 கோடி ஒதுக்கி வைத்தது. அதையே தற்போது 13,343 கோடி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிது போல தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிசான் அட்டையால் கடன் சுமைதான் கூடும்
கிசான் அட்டை திட்டத்தை முக்கிய அறிவிப்பாக மத்திய அரசு காட்டிக் கொண்டுள்ளது.  இதுவரை 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 4.22 லட்சம் கோடியை கடன் பெற்ற  3 கோடி விவசாயிகள், ரிசர்வ் வங்கி அறிவித்த 3 மாத கடன் சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது. இதில் இருந்தே விவசாயிகளின் நிதி நிலையை அரசு உணர்ந்து கொள்ளலாம். உண்மையில் நேரடியாக பணப்பலன் வழங்கினால்தான் அது நேரடி சலுகை திட்டமாக இருக்கும். மாறாக, இந்த சலுகை திட்டத்தால் கடன் வட்டிதான் உயரும். எனவே, சலுகை என்ற பெயரில், கஷ்டத்தில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் சுமையைத்தான் மத்திய அரசு  ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

* தமிழகத்தில் விவசாய நிலம் வைத்துள்ள 93% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள். இவர்கள் மொத்த பரப்பில் 62 சதவீதபரப்பில்தான் சாகுபடி செய்கின்றனர்.
* சராசரி மழையளவு 921 மி.மீ. நாட்டின் சராசரி மழையளவான 1,200 மி.மீ உடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
* தனிநபருக்கு கிடைக்கும் ஆண்டு சராசரி நீர் 750 கன மீட்டர். இது நாட்டின் சராசரி அளவான 2,200 கன மீட்டருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

எண்ணிக்கையில் குளறுபடி பலன் கிடைப்பது எப்படி
பிரதமர் கிசான் திட்டத்தில், விவசாயிக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 87,000 கோடி. நாட்டில் 14.5 கோடி விவசாய குடும்பங்கள் உள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-16 விவசாய கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரதமர் கிசான் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 9 கோடி விவசாய குடும்பங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை. அதோடு, நாட்டின் மொத்த விவசாயிகள் எண்ணிக்கையில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி பேர் விடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மிக அதிக விவசாயிகள் உள்ள பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே கூட, இந்த திட்டத்தில் விவசாயிகள் மிக குறைவாகவே சேர்ந்துள்ளனர். உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் ஒரு கோடி விவசாயிகள் உள்ளனர். இதில் இந்த திட்டத்தில் பதிவு செய்தது 55.05 லட்சம் விவசாயிகள்தான். பீகாரில் அதிகபட்சமாக 1.64 கோடி விவசாயிகள் உள்ளனர். இதில், மாநில அரசால் அடையாளம் காண முடிந்தது 52.5 லட்சம் பேர்தான். நேரடி திட்டத்தை செயல்படுத்துவதிலேய இவ்வளவு குளறுபடிகள் இருக்கும்போது, வெறும் அறிவிப்புகள் எப்படி பலன்தரும் என்கின்றனர் விவசாயிகள்.

கடைசியில்  மக்களுக்கு  பூஜ்யம்  தானா:
20,00,000,00,00,000  - என்னாது இது,  தெரியுதுல்ல. கொரோனா வைரஸ் பயங்கரம் வர்க்க பேதம் இல்லாமல் ஏழை, நடுத்தரவர்க்கம், என நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது. கார்ப்பரேட் முதல் பெட்டிக்கடை வரை முடங்கிவிட்டது. இவர்களை காப்பாற்ற மத்திய அரசு அறிவித்ததுதான் இந்த பெருந்தொகை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாளாக அறிவித்த சலுகைகள் அந்தந்த துறையினருக்கு போய் சேர்ந்ததா...சேருமா? சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியா? சைபர் எண்ணும் ேபாது தலைசுற்றும்; கடைசியில்...? பலதரப்பட்ட துறைகளின் உண்மை நிலை குறித்த ஒரு வேதனை தொடர்.



Tags : Tamil Nadu ,Corporate Cash Bar ,Soil Mannakiya Awful: The Federal Government , Tamil Nadu farmers, livelihood, corporate, central government
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...