×

‘என்னப்பா... ப்ரெஷ் காய்கறி வாங்கி வைக்கிறதில்லையா?’ கதவைத் தட்டும் காட்டுயானைகள்

* மூணாறு பகுதி வியாபாரிகள் பீதி  
* நடமாட பொதுமக்களும் அச்சம்

மூணாறு:  மூணாறில் நேற்று அதிகாலை உலா வந்த கொம்பன் யானைகள் காய்கறி கடைகளை சூறையாடி பழங்கள், காய்கறிகளை தின்று தீர்த்தன. நகரில் அடிக்கடி உலா வரும் காட்டுயானைகளால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வர்த்தக நிறுவனங்கள், கடைகள், காய்கறிச் சந்தைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பொதுமக்கள் நடமாட்டம் குறைவதால், நகர் வெறிச்சோடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தும் காட்டுயானைகள் நகருக்குள் ஜாலியாக உலா வருகின்றன.  கடந்த வாரம் நகரில் தனியாக உலா வந்த கொம்பன் யானை ‘படையப்பா’ தற்போது ‘கணேசன்’ என்ற கொம்பன் யானையையும் தன்னுடன் அழைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நகரில் உள்ள அந்தோணியார் காலனி பகுதிக்கு, நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்த படையப்பாவும், கணேசனும், நல்லத்தண்ணி எஸ்டேட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள காய்கறி கடைகளை நோட்டமிட்டன. பின்னர் இரு யானைகளும் கடையின் கதவை தள்ளித் திறந்து, மூடப்பட்டிருந்த தார்ப்பாய்களை கிழித்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பழங்கள், முட்டைக்கோஸ், தக்காளி ஆகியவற்றை தின்று தீர்த்தன.

மூன்று மணிநேரம் முகாமிட்ட இரு யானைகளும் காலை 7 மணியளவில் மீண்டும் பொடிநடையாக காட்டுக்குள் சென்றன. நகரில் தொடர்ந்து யானைகள் உலா வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு தளர்வில் வங்கிக் கடன், நகைக் கடன் மூலம் வியாபாரிகள் வியாபாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அவற்றை யானைகள் நாசம் செய்கின்றன. இதனால், வியாபாரிகள் வேதனையில் உள்ளனர். மூணாறு நகருக்குள் யானைகள் நுழைவதை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Why not , buy, fresh vegetable?
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!