பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் பல்லவர்கால குடைவரை கோயிலில் குடிமகன்கள் அட்டூழியம்

* வரலாற்றுச்சின்னங்கள் கேலிக்கூத்தாக்கப்படும் அவலம்  

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாணாவரம்: பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் உள்ள பல்லவர்கால ஒரே கல்லில் ஆன குடைவரைக்கோயிலில், சமூக விரோதிகளின் அத்துமீறலால் கேலிக்கூத்தாக்கபட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாணாவரம் அருகே உள்ளது மகேந்திரவாடி கிராமம். இங்கு 2,700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஒரே கல்லில் ஆன குடைவரைக் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்குடைவரைக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு  வருகிறது.  குடைவரைக் கோயிலை, சுற்றிப்பார்க்க பல்வேறு வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து, சுற்றுலாப்பயணிகள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். ஒரே கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள தூண்களையும், கருவறையையும்  எங்கு முதலில் தொடங்கி எங்கு முடித்து இருப்பார்கள் என்ற  ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இப்படி பழமையும்,  வரலாற்று பெருமையும் வாய்ந்த சிற்பக் கலைக்கு புதுவடிவம் கொடுத்து, அதிசயமாகத் திகழும் இக்குடைவரை கோயில், தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறி இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடைவரைக் கோயிலின் முன்புறம் ஆங்காங்கே மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. தினமும் இப்பகுதியில் பகல் மற்றும் மாலை நேரங்களில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலை சுற்றி பார்க்க குடும்பத்துடன் வரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மிகுந்த சிரமமும், வேதனையும் அடைகின்றனர். இக்கோயிலை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயில், இரும்பு கேட் அமைந்துள்ள போதிலும், நுழைவுவாயில் பகுதியில் ஒரு வழிப்பாதை திறந்திருப்பதால் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகள் சிலர் மது அருந்தி, மது பாட்டில்களை அங்கேயே போட்டு செல்வது வழக்கமாக உள்ளது.   இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இங்கு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றுச் சின்னங்களை கேலிக்கூத்தாக்கக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: