×

பழநியில் ‘திண்டுக்கல்’ சர்ச்சைப் பேச்சு ‘குடிக்கத் தண்ணி இல்லைங்க’ - பொதுமக்கள் ‘இருக்கிற ஏரியாவுக்கு போங்க...’ - அமைச்சர்

* நிவாரண நிகழ்ச்சியில் நெரிசலால் தவறி விழுந்த மூதாட்டி

பழநி: குடிநீர் பிரச்னை குறித்து புகார் கூறியவர்களிடம், ‘‘குடிக்க தண்ணீர் இல்லைனா... வேற ஏரியாவுக்கு போங்க...’’ என்ற வனத்துறை அமைச்சரின் அலட்சியப் பேச்சால் பழநி அருகே பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே அ.கலையம்புத்தூரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்தார். அப்பகுதி பெண்கள் சிலர் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுமக்களின் குமுறலை கண்டுகொள்ளாமல், ‘‘தண்ணீர் இல்லை என்றால், வேற ஏரியாவுக்கு சென்று விடுங்கள்...’’ என்று அலட்சியமாக கூறினாராம். அமைச்சரின் இந்த அலட்சியப் பதிலால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பிரச்னையை தீர்க்க வேண்டிய அமைச்சரே இப்படி அலட்சியமாக பதிலளித்ததால் இனி யாரிடம் சென்று கேட்பது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

பழநி பகுதியில் திமுக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் அதிகளவு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிமுகவினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக அரசு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரை கொண்டு பழநி அருகே ஆயக்குடியில் நேற்று அதிமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக காலையில் இருந்தே ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்த பெண்கள் முண்டியடித்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் மூதாட்டி ஒருவர் சரிந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அம்மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். தள்ளுமுள்ளு காரணமாக அமைச்சர் நிகழ்ச்சி மேடைக்கு வராமல் கீழே நின்றபடியே சிலருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு சென்றார். இதுபோல் பழநி தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் உரிய சமூக விலகல் பின்பற்றப்படவில்லை. அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.



Tags : Dindigul ,Palani , Do not quit drinking - Public - go to the area where the public ...
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...