ஊரடங்கில் தளர்வு அமலுக்கு வந்தும் விழாக்கள் இல்லாததால் அச்சக தொழிலாளர்கள் பாதிப்பு: அரசு உதவித்தொகை வழங்குமா?

தூத்துக்குடி:  ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் விழாக்கள் எதுவும் இல்லாததால் அச்சக தொழிலாளர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுத்திட மார்ச் 24ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம்தேதி முதல் வாகன விற்பனை நிலையங்கள், பர்னிச்சர், செல்போன் கடைகள் உள்ளிட்ட 34 வகையான ெதாழில் நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனால் ஓரளவிற்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த வரிசையில் அச்சகங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அச்சகங்கள், டிஜிட்டல் பேனர் பிரஸ்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  தற்போது அச்சகங்கள் திறந்துள்ளபோதும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலையிலேயே உரிமையாளர்கள் உள்ளனர். இதுகுறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், பொதுவாக அச்சகங்களில் திருமணம், சடங்கு, கிரகபிரவேசம், கோயில் திருவிழாக்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், நோட்டீஸ்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்படும். இதுபோன்று நினைவுஅஞ்சலி உள்ளிட்டவைகளுக்கான நோட்டீஸ்களும் அச்சிடுவது உண்டு.

இதுபோக மாவட்ட அளவில் பெரிய அளவிலான அச்சகங்களில் அரசுக்குரிய கோப்புகள், குறிப்பேடுகள், பள்ளி, கல்லூரிகளுக்கான கோப்புகள், தனியார் நிறுவனங்களுக்கான பில் புத்தகங்கள் போன்றவை அச்சிடுவதுண்டு.  தற்போதுள்ள சூழலில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் முடங்கி கிடக்கின்றன. மேலும் அரசு அறிவுறுத்தல்படி திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் சுபநிகழ்ச்சிகளை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள திருமணங்கள் உள்ளிட்டவைகள் மட்டும் மிகவும் எளிமையாக நடந்து வருகின்றன. அரசு உத்தரவால் கோயில்களில் எந்த விழாக்களும் நடக்கவில்லை. திருமணம், திருவிழாக்கள் நடந்தால் தான் மக்கள் டிஜிட்டல் பேனர், அச்சகங்களையும்  தேடி வருவார்கள். ஆனால் ஊரடங்கால் சுபநிகழ்வுகளும், திருவிழாக்களும் நடைபெறாததால் அச்சங்களை திறக்க அனுமதி அளித்தும் அவற்றை இயக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே அச்சக தொழிலை பாதுகாத்திடும் வகையில் மின் கட்டணத்தில் சலுகை, தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.

சீசன் காலங்களில் முடங்கியது

பொதுவாக மே மாதங்களில் பெற்றோர் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வர். இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் குறித்தம், ஜவுளி நிறுவனங்களும் சீருடைகள் குறித்தும், வீட்டு உபயோக ஏஜென்சிகள் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்றவை குறித்தும் துண்டுபிரசுரங்கள் அச்சடித்து விநியோகிக்கப்படும். தற்போது கொரோனாவால் சீசன் காலத்தில் அச்சக தொழில் முற்றிலுமாக முடங்கி போய் கிடக்கிறது.

Related Stories: