ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு கொரோனா ஊரடங்கால் மிரண்டது கொல்லிமலை: இயல்பு வாழ்க்கை முடங்கியதால் பரிதவிப்பு

சேந்தமங்கலம்:  கொரோனா ஊரடங்கால்  சுற்றுலாத்தலமான கொல்லிமலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரசித்தி  பெற்ற சுற்றுலாத் தலமான கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அடிவாரமான காருவள்ளியிலிருந்து 70 கொண்டைஊசி வளைவுகளை கடந்து கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி மன்னன் ஆட்சி செய்த பகுதி இது என்று சங்க இலக்கியங்கள் சான்று கூறும் பெருமை கொல்லிமலைக்கு உண்டு.  இப்படி ஊரே மெச்சிய கொல்லிமலை, தற்போது 14 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியமாக திகழ்கிறது.  இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.  ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலாஅருவி, அறப்பளீஸ்வரர் கோயில், சீக்குப்பாறை காட்சி முனையம், எட்டுக்கை அம்மன் கோயில், நம்மருவி, தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம் என்று இயற்கை அழகால் கொல்லிமலை இதயங்களை வசீகரிக்கிறது.

இங்கு வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு பயிரிட்டு, விற்பனை செய்வதையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதில் ஊடு பயிராக காபி, கமலா ஆரஞ்சு, அன்னாசி சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் பலாப்பழம் மிகுந்த சுவை கொண்டதாகும்.  கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலாப்பழம், அன்னாசி, மிளகு, மலைப்பழம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இயல்பு நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கொல்லிமலைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இதனால் இங்குள்ள விவசாயிகள், சிறுவியாபாரிகள், சமையல் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என்று பலரது வாழ்க்கை, சிரமங்கள் எதுவும் இல்லாமல் சீராக சென்று கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் உலகை உலுக்கும் அரக்கனாய் உருவெடுத்த  கொரோனாவால், சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனா  பாதிப்பால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது கொல்லிமலை. முக்கிய இடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உள்ளூரில் மட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இங்கிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு மிளகு பறிக்க சென்றனர். ஊரடங்கு உத்தரவால் அவர்களையும், ஓரிரு நாட்களிலேயே அம்மாநில அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். சமூக இடைவெளி உத்தரவால், கொல்லிமலையில் பயிரிடப்பட்டுள்ள மிளகு செடியிலிருந்து மிளகு பறிக்க முடியாமல் தோட்டத்திலேயே உதிர்ந்து கிடக்கிறது. அதோடு இங்கு விளையும் மிளகு, அன்னாசி, பலாப்பழம், வாழைப்பழம்  போன்றவற்றை வாங்க வியாபாரிகள் வராததால், அவற்றின் விற்பனையும் முடங்கி, இவை அனைத்தும் தோட்டத்திலேயே அழுகிக்கிடக்கிறது. இதனால் வாழ்வாதாரம் இழந்து 50நாட்களுக்கும் மேலாக பரிதவித்து நிற்கின்றனர் கொல்லிமலையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள். ஊரடங்கு முழுமையாக தளர்ந்து, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து, இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டும். அப்போது தான் சீரான வாழ்க்கை அமையும் என்பது இங்குள்ள அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

பறிக்க முடியாமல் வீணாகும் மிளகு: விவசாயி கண்ணீர்

சோளக்காடு விவசாயிகள் சங்க நிர்வாகி  பொன்னுசாமி கூறுகையில், ‘‘கொல்லிமலை மிளகு மிகவும் பிரசித்தி பெற்றது.  அறுவடை நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மிளகு பறிக்க முடியாமல் தோட்டத்திலேயே உதிர்ந்துள்ளது.  அதனை கூலி ஆட்கள் வைத்துதான் பொறுக்க வேண்டும்.  இதற்கு அதிக செலவாகும்.  தற்போது வியாபாரிகள் வராததால் மிளகு விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  கிலோ ₹380 க்கு விற்கப்பட்ட மிளகு தற்போது ₹330 க்கு விற்கப்படுகிறது.  அதையும் சமவெளி பகுதிக்கு கொண்டு சென்று விற்கமுடியவில்லை. மிளகுகளை பறித்து சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டி, புதன்சந்தை பகுதியில் உள்ள உலர் களங்களுக்கு காய வைக்க முடியாமல், தோட்டத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு அரசு போதிய நிவாரணம் வழங்கவேண்டும்,’’ என்றார். 

Related Stories: