ஊரடங்கால் 2 மாதமாக சுற்றுலா பயணிகளின்றி ஆழியார் வெறிச்’: ரூ.15 லட்சம் வருவாய் இழப்பு

பொள்ளாச்சி: கொரோனா ஊரடங்கு தொடர்வதால், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை 2 மாதமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடுகிறது. இதனால், ரூ.15லட்சம்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அணைக்கு வரும் பயணிகள் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு, பின் பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிப்பர். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்வர். பள்ளி கோடை விடுமுறை நாளின்போது,  தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அச்சமயம் சராசரியாக தினமும்  2ஆயிரம் முதல் 2500பேர் வரை வந்து செல்வார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பயணிகளிடம் கட்டண வசூல் தொகையாக ரூ.30ஆயிரம் வரையிலும், ஒரு மாதத்தில் ரூ.8லட்சம் வருவாய் கிடைக்கும்.

இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்துள்ளது. ஆனால் அதன்பின், 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருவது கிடையாது. கடந்த இரண்டு மாதமாக சுற்றுலா பயணிகள் இல்லாமல் அணை வெறிச்சோடுகிறது.  ஊரடங்கு உத்தரவு காரணமாக,  ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை தடையால், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.15லட்சம் வரையிலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், ஆழியார் அணைப்பகுதிக்கு இரவு மட்டுமின்றி, பகல் நேரத்திலும் யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உலா வருகிறது. அதிலும், அணையின் மேல் பகுதியில் யானை நடமாட்டம் அடிக்கடி இருப்பதாகவும், சுற்றுலா தலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: