×

ரமலானில் கிடைத்த திருக்குர்ஆன்...

இன்று, இஸ்லாமியர்கள் மிகவும் குதூகலத்தோடு, ரமலான் பெருநாளை கொண்டாடுகின்றனர். ‘கலிமா’ என்கிற இறை நம்பிக்கை, தினம் ஐவேளைத் தொழுகை, மூன்றாமிடத்தில் ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகள் இருக்கிறது. வருவாய் லாபத்தில் இரண்டரை சதவீதம் வழங்கும் ‘ஜக்காத்’ எனும் நான்காம் கடமையும், வசதி படைத்தோருக்கான ‘ஹஜ்’ எனும் இறுதிக்கடமையும் முஸ்லிம்களின் மகத்தான ஐம்பெரும் கடமையாகும். இந்த மூன்றாம் கடமை பெருமைக்குரிய நோன்பு காலம், திருக்குர்ஆன் வழங்கிய சிறப்பும் கொண்டிருக்கிறது. இதனால் இந்த ரமலான் பண்டிகையும் கூடுதல் கொண்டாட்டம் கொள்கிறது. முகமது நபிகளார் அரபு நாட்டின் மக்கா நகரைத் துறந்து. மதீனா நகருக்குச் சென்ற ‘ஹிஜ்ரத்’ எனும் நிகழ்விலிருந்தே ‘ஹிஜ்ரி’ எனும் இஸ்லாமிய ஆண்டு ஆரம்பிக்கிறது. இஸ்லாமிய 12 மாதங்களில் ரமலான் மாதம் மகா மகத்துவம் கொண்டிருக்கிறது. கோடை, குளிர், இளவேனில், மழை என இந்த ரமலான் மாதத்தில் அத்தனை ‘சீதோஷ்ணங்களும்’ கலந்திருக்கிறது. ஆயிரம் மாதங்களை விட உயர்ந்ததாக இறைவன் திருக்குர்ஆனில் இந்த ரமலானைக் குறிப்பிடுகிறான். இம்மாதத்தில் 30 நோன்புகள் நோற்கப்படுகிறது. இந்த நோன்பு காலமே மனித ஒழுக்கம், நற்குணம், ஈகை உணர்வளிக்கிறது. ஆன்மிக உணர்வும் இந்நாட்களில்தான் உயர்கிறது.

‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’ பொருள் தருகிறது. பாவங்களைக் கரித்துப்பொசுக்கும் இம்மாதத்திற்கு ‘ரமலான்’ பெயரிட்டனர் என்பர். இதுதவிர, பொதுவான மாதங்களுக்கு அரேபியர் பெயர் வைத்த நேரத்தில், இந்த ஒன்பதாவது மாதம் ‘வெயில் காலமாக’ இருந்து, ‘சுட்டெரித்தல்’ பொருளில் இப்பெயரிட்டு, அடுத்தடுத்து குளிர்காலத்திலும் இம்மாதம் வந்து, ‘ரமலான்’ என்பதே நிலைத்திருக்கலாம். ரமலான் மாதம் திருக்குர்ஆன் மட்டுமல்ல, ஏனைய அத்தனை வேதங்களும் அருளப்பட்ட சிறப்புக்கொண்டிருக்கிறது. ‘‘இப்ராகிம் (அலை) அவர்களது (சுஹுஃப்) வேதாகமம் ரமலான் மாதத்தின் முதலாவது இரவில் அருளப்பட்டது. தவ்ராத் வேதம் இம்மாதத்தின் 6ம் நாளும், இன்ஜில் வேதம் இதேமாதத்தின் 13ம் நாளும் அருளப்பட்டன’’ என்று வாஸிலா பின் அல்அஸக (ரலி) அறிவிக்கிறார்கள். இறுதிவேதமான திருக்குர்ஆனுடன் இன்னபிற வேதங்களையும் வழங்கிய சிறப்புக்கொண்டதாக இந்த ரமலான் மாதம் இருக்கிறது. ரமலான் மாதத்தின் 30 தினங்களில் கடைசி 10 நாட்களின் ஓர் ஓற்றைப்படை இரவில்தான் ‘திருக்குர்ஆன்’ இறக்கியருளப்பட்டது. இவ்வேதம் இறைவனால் வானவர் தலைவர் ஜிப்ரீல் வாயிலாக முகம்மது நபிகளாருக்கு அருளப்பட்டது. குர்ஆன் எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுவது’ அல்லது ‘தொகுக்கப்பெற்றது’ பொருளாகும். எழுத, வாசிக்க அறிந்திராத முகம்மது நபிகளாரிடம், வானவர் தலைவர் ஜிப்ரீல் இறைவனிடமிருந்து வசனங்களைக்கொண்டு வந்து ஓதிக்காட்டுவார். அதை அப்படியே நபிகளார் மனனமிட்டு, தம் தோழர்களுக்கு ஓதிக்காட்ட, தோழர்கள் அவற்றை பதிவு செய்து பாதுகாத்து வந்தார்கள். பிறகு இது தொகுக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

நபிகளார் தமது 41வது வயதில் மக்கா அருகில் ஹிரா குகையில் தங்கியிருந்தபோது, ஆரம்பமாக குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பட்டன. இதன்பிறகே முகம்மது அவர்கள் நபியாக, இறைத்தூதரானார். அப்போதிருந்து அன்னார் மறையும் வரை 23 ஆண்டு காலம் சிறிது சிறிதாக குர்ஆன் அருளப்பட்டு நிறைவடைந்தது. இந்த 6 ஆயிரத்து 666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், எந்த வேதமும் ஆராயப்படாத அளவிற்கு ஆராயப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். திருக்குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் கணக்கிடப்பட்டிருக்கிறது.ஸபர் (மேற்கோடு), ஸேர் (கீழ்கோடு, பேஷ் (மேல் வளைவுக்கோடு), ஷத்து (அழுத்தல் குறி), மத்து (நீட்டல் குறி) என்று மூல நூலிலிருந்து ஒரு துளியும் மாறுபடாது இன்றளவும் தொடர்வதை பல்வேறு ஆய்வறிஞர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆரம்பக்காலமே மிகத்துல்லியமாக குர்ஆன் கணக்கிடப்பட்டதால் எவரும், எக்காலத்திலும் யாதொரு வசனத்தை சொல்லை, எழுத்தை, புள்ளியை, அடையாளக்குறியை, எதையும் கூட்டிக்குறைக்க, எந்த மாறுதலும் செய்யச் சாத்தியப்படாதவாறு பாதுகாக்கப்ட்டிருக்கிறது.

கடந்த 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டு வரும் வேதமாக திருக்குர்ஆன் இருக்கிறது. உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மூலப்பிரதிகளில் சில ஈராக்கின் பாக்தாத் மியூசியம், ரஷ்யாவின் தாஷ்கண்ட் மற்றும் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள டாப்காப்பி அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆன் உலக மொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் ‘சிரியாக்’ மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பானது. பர்பரீ, பாரசீகம், ஆங்கிலம், லத்தீன், இத்தாலி, ஸ்பானீஷ், டச்சு, ருஷ்யன், டேனிஷ், ஹங்கேரியன், ரோமானி, துருக்கி, ஜப்பானிஷ், சைனீஸ் மட்டுமல்லாது, நம்நாட்டு தமிழ், ஹிந்தி, உருது, குஜராத்தி, தெலுங்கு, வங்காளம், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, சிந்தி, குர்முகி என அத்தனையிலும் திருக்குர்ஆன் இருக்கிறது.

Tags : Holy Quran , The Holy Quran ...
× RELATED சகோதரத்துவத்தை போற்றும் ஈகை திருநாள்