×

தொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில் வெடிக்கும்: ஜேம்ஸ், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகி

கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட்கிரைண்டர்ஸ், பம்பு, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில், கிராமப்புறங்களை சுற்றி  சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும்  உள்ளன. உலகளவில் அதிக அளவிலான வெட்கிரைண்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில்தான் உள்ளன. பம்புகள் தயாரிக்கும் தொழிற்நிறுவனங்களும் இங்குதான் அதிகம். இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த பம்புசெட்களில் 60 சதவீதம் கோவையின் பங்களிப்பு. இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 40 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்கள் ஆகும். எண்ணிக்கையில் இவர்கள் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கோவையில் தொழில் அடியோடு முடங்கியது. கட்டுமானம், எலக்ட்ரிக், பிளம்பிங், டைல்ஸ் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் எவ்வித உதவியும் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், பலர் உணவு கிடைக்காமல் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பல இடங்களில் போலீஸ் லத்திசார்ஜ் செய்யப்பட்டது. பட்டது போதும், இனி ஊரைப்பார்த்து போக வேண்டியதுதான் என முடிவுக்கு வந்து வடமாநில தொழிலாளர்கள் சாரை சாரையாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களை நோக்கி படையெடுக்க துவங்கினர்.

தொடர்ந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ? சொந்த, பந்தங்களை இழந்து விடுவோமோ? என்ற எண்ணமும் உருவாகியது. இதன் காரணமாகவே வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்தனர். இவர்களது அணிவகுப்புக்கு ஏற்ப, ரயில் வசதி இல்லை. இதனால் பலர் கண்டெய்னர் லாரிகளில் மறைந்து செல்கின்றனர். பலர் கால்கடுக்க நடந்தே செல்கின்றனர். இப்படி செல்வதால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு விட்டாலும், ஆலைகளை இயக்க ஆட்கள் இல்லை. ஊரடங்கு முழுமையாக விலக்கும்போது, வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக அவர்களது ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள்.

இனி, பம்புசெட், கிரைண்டர், ஆட்டோெமாபைல் உதிரிபாகம், பவுண்டரி என பல்வேறு விதமான பொருட்களின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும். இவர்களைப்போலவே, தென் மாவட்டங்களை சேர்ந்த 60 சதவீத தொழிலாளர்களும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இத்தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கான மின்சார  கட்டணத்தை 3 மாத காலத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் திட்டங்களுக்கு  பதிலாக நிவாரண திட்டத்தை அறிவித்து, நிவாரண தொகை வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களை மீண்டும் நடத்த  முடியாமல் அவதியடையும் சூழல் ஏற்படும். பஞ்சாலை மில்கள், உணவகங்கள், கட்டிட  தொழில்கள் என அனைத்து தரப்பு தொழில்களும் பாதிக்கப்படும். வடமாநில  தொழிலாளர்களை மட்டுமே நம்பி இயங்கி வந்த தொழில் நிறுவனங்களின் எதிர்காலம்  இனி கேள்விக்குறிதான்.

வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளை  செய்துகொடுக்க தவறியதே, அவர்கள் சொந்த ஊர் செல்ல காரணமாகி விட்டது. பல  சிறிய நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என பல துறையினரும் வடமாநில  தொழிலாளர்களை நம்பியே உள்ளனர். ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, தொழிலாளர்  தட்டுப்பாடு பெருமளவில் வெடிக்கும். இனி, பம்புசெட், கிரைண்டர், ஆட்டோமொபைல் உதிரிபாகம், பவுண்டரி என பல்வேறு விதமான பொருட்களின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும்.



Tags : James ,Tamil Nadu Industries and Small Business Entrepreneurs Association ,DACT ,Nadu Industry ,shortage , Labor, James, Managing Director, Tamil Nadu Industry
× RELATED டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700...