ரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி

மும்பை: ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் ரசிகர்கள்தான் தீப்பொறியாக இருந்து ஆட்டத்தில் உற்சாகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றனர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா தெரிவித்தார். லாலிகா கால்பந்து தொடரின் செய்தி தொடர்பாளருடன் சமூக ஊடகம் ஒன்றில் ரோகித் உரையாடினார். ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது குறித்து அவர் கூறியதாவது: எந்த ஒரு விளையாட்டுக்கும் மிக முக்கியமானவர்கள், எந்த ஒரு விளையாட்டையும் கவர்ச்சியாக மாற்றுபவர்கள், எல்லோரையும் ஈர்க்கும் வகையில் செய்பவர்கள் ரசிகர்கள்தான். அவர்கள்தான் விளையாட்டில் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் தீப்பொறியாக இருக்கிறார்கள்.

வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவதில் ரசிகர்களின் பங்கு மகத்தானது. எனவே விளையாட்டு போட்டிகளைப் பொறுத்தவரை எப்போதும் ரசிகர்கள்தான் முக்கியமானவர்கள். அதே சமயம், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சூழ்நிலையில் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியுள்ளது. மீண்டும் போட்டிகளை தொடங்கும்போது, ரசிகர்கள் உட்பட அனைவரின்  பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு ரோகித் கூறியுள்ளார்.

Related Stories: