சிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர் மூச்சுத்திணறலால் திடீர் மரணம்: மருத்துவ அறிக்கையில் நோய் தொற்று உறுதி

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நபர் திடீரென இறந்தார். அவரது மருத்துவ அறிக்கையில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ெபாதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மண்ணடி புது தெருவை சேர்ந்த 54 வயது நபர், கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் கடந்த 9ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு வார்டில் அனுமதித்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதி இவர் குணமடைந்து விட்டதாக கூறி, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். அப்போது, அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவரது உடலை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிய வந்தது. சென்னையில் இதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் 3 பேரும் சில நாட்களிலேயே இறந்தனர். இந்நிலையில், மேலும் ஒருவர் இதேபோல் இறந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல், குணமடைந்து விட்டதாக கூறி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். அவ்வாறு வீடு திரும்பியவர்களில் பலர் தொடர்ந்து இறந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகள் விசயத்தில் கவனம் செலுத்தி, முழுமையாக குணமடைந்த நபர்களை மட்டுமே வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அதுவரை சிறப்பு வார்டில் முறையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: