மாத தவணை காலத்தை ஒத்தி வைத்தால் போதாது வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான கடன் தவணையை ரிசர்வ் வங்கி முதற்கட்டமாக 3 மாத காலத்திற்கு ஒத்திவைத்தது. இதனால் கடன் வாங்கியவர்கள் பயனடைகிறார்கள். கடன் வாங்கியவர்களுக்கான மாத தவணைக்காலத்தை ஆகஸ்ட் 31 வரை மேலும் 3 மாத காலத்திற்கு ஒத்திவைத்தது ரிசர்வ் வங்கி. இதுவும் நல்ல அறிவிப்புதான்.

Advertising
Advertising

எனவே 6 மாத காலத்திற்கு கடன் தவணை செலுத்த தேவையில்லை என்பதால் கடன் வாங்கியவர்கள் தற்காலிகமாக சிரமத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள்.

இருப்பினும் 6 மாத காலத்திற்கான வட்டித் தவணையை பின்னர் செலுத்த நேரிடும் போது கூடுதல் வட்டியோ அல்லது வேறு ஏதேனும் தொகையோ கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்றால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக அர்த்தம்.  மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு மாத வட்டி தவணையை ஒத்திவைத்தது முழு பலன் தர வேண்டுமென்றால் 6 மாதத்திற்கு பிறகு எக்காரணத்திற்காகவும் கூடுதல் தொகை வசூல் செய்யக்கூடாது.

தொடர்ந்து பொதுமக்களின் பொருளாதார பிரச்னையை கவனத்தில் கொண்டு வட்டிக்கான மாத தவணைக்காலத்தை ஒத்திவைத்தால் மட்டும் போதாது வட்டிதொகையையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் பெரும் பலன் தரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: