வெப்ப சலனத்தால் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் 6 மாவட்டத்தில் வெயில் கொளுத்தும்

* 2 நாள் வெளியே வராதீங்க

* வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுவதால் 6 மாவட்டங்களில் வெயில் தகிக்கும். அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக 14  மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிய இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அதிகபட்சமாக இதுவரை 109 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இடையில் வங்கக் கடலில் வந்த அம்பன் புயல் காற்றின் ஈரப்பதம் முழுவதையும் உறிஞ்சியதால் நாடு முழுவதும் வெயில் மற்றும் அனலால் தகிக்கிறது.

இதையடுத்து, அதிகபட்சமாக நேற்று, திருச்சியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. அதைத் தொடர்ந்து வேலூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 108 டிகிரி, மதுரை, சேலம், திருத்தணி 106 டிகிரி, வெயில் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் இன்றும் வெயில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெரும்பாலான இடங்களில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக கோவை,நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வட மேற்கு வங்கக் கடல் பகுதியில்பலத்த காற்று மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 25, 26ம் தேதிகளில் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அதேபோல மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: