தமிழகத்தில் மதுவிற்பனை மீண்டும் ஏறுமுகம்: 23ம் தேதி 120 கோடிக்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் மதுவிற்பனை குறைந்துவந்த நிலையில் தற்போது ஏறுமுகத்தை அடைந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் 120.4 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நீங்கலாக தமிழகத்தில் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவினால் 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் திருவிழா போல் கூட்டம் நிரம்பியது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் 295 கோடிக்கு மதுவிற்பனையானது. இதையடுத்து, 16ம் தேதி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நாள்தோறும் 500 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு மதுவிற்பனை நடந்தது. ஆனால், மதுவாங்குவதில் இருந்த விதிகள் தளர்த்தப்பட்டதால் மதுவிற்பனை சூடுபிடித்தது.

16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 402.9 கோடிக்கு மதுவிற்பனையானது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மதுவிற்பனையானது 100 கோடிக்கும் குறைந்து காணப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாமல் மதுபானங்கள் இருப்பு குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, மதுபான உற்பத்தி ஆலைகளில் தேக்கிவைக்கப்பட்ட மதுபானங்கள் கடைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மூடப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இதனால், மதுவிற்பனை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் 120.4 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 17.2 கோடி, திருச்சி மண்டலத்தில் 26.8 கோடி, சேலம் மண்டலம் 25 கோடி, கோவை மண்டலம் 24.1 கோடிக்கும் அதிகபட்சமாக  மதுரை மண்டலத்தில் 27.3 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: