சென்னையில் குறையாத கொரோனா பாதிப்பு; மே 31-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்குமா?... 26-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியிருப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மே 31-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 2 நாளில் தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளது. சென்னையை தவித்து தமிழகத்தில் இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் கொத்து கொத்தாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 6 நாட்களாக பாதிப்பு தினமும் 500-ஐ தாண்டுகிறது. கடந்த சனிக்கிழமை உச்சமாக 624 பேர் சென்றிருந்த எண்ணிக்கை இன்றும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடக்கும் சூழலுக்கு சென்றுள்ளது.

ஹாட் ஸ்பாட் பட்டியலில் சென்னை உள்ளதால் ஊரடங்கு தளர்வுகளை நடைமுறை படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. மே 31-ம் தேதியுடன் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. ஜுன் 1-ம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என சென்னை மக்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வந்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது. வரும் 26-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வல்லுநர் குழுவினர் சந்திக்கின்றனர். அவர்களின் பரிந்துரையில் பேரில் தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருமா? அல்லது 5-வது கட்டமாக தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் செயல்படுகின்றன. பேருந்து இயக்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக ஆகியுள்ளது. சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. இவ்வாறு எல்லா வகையிலும் சென்னை விடுபட்டு இருப்பதால் தமிழகத்தின் தலைநகரில் வசிக்கும் மக்கள் விரத்தியின் உச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆறுதல் அளிக்குமா? அல்லது மீண்டும் அதே நிலை தொடருமா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories: