இதுதான் காங். உண்மை முகம்: மாணவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப ரூ.36 லட்சம் பெற்ற ராஜஸ்தான் அரசு...பாஜக கடும் தாக்கு...!

லக்னோ: வெளிமாநில மாணவர்களை அனுப்பி வைத்ததற்கு ரூ.36 லட்சம் பெற்ற ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பல லட்சம்  வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள், பஸ்கள், லாரி, வேன், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு வகைகளில் சொந்த ஊர்  திரும்பி வருகின்றனர். இவற்றில் இடம் கிடைக்காத அல்லது பணம்  இல்லாதவர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும், இவர்கள் தண்டவாளங்கள், சாலைகளில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும்  விபத்துகள் ஏற்பட்டு, இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உ.பி. மாணவர்கள் சுமார் 12,000 மாணவர்கள் சிக்கி தவித்தனர். அவர்களை, மீட்டு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு , உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி  வைத்தது. இதற்கு கட்டணமாக ரூ.19 லட்சம், ராஜஸ்தான் அரசு கேட்டதையடுத்து, அதற்கான காசோலையை உத்திரப்பிரதேச அரசு அளித்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக ரூ.36 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அளிக்குமாறு ராஜஸ்தான் அரசு  மீண்டும் கேட்டதையடுத்து, உத்திரப்பிரதேச அரசு அதையும் அளித்துள்ளது.

இந்த விவரங்கள் தற்போது வெளிவந்ததையடுத்து பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதற்கு, மக்களுக்கு சேவை செய்வதாக கூறி வரும், காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது  என்று உத்திரப்பிரதேச பாஜக பொதுச்செயலர் விஜய் பகதூர் பதக் குற்றம்சாட்டியுள்ளார். மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் அரசு கூடுதலாக ரூ.36 லட்சம் கேட்டுள்ளது, அக்கட்சியின் மனிதத்தன்மையற்ற செயலை காட்டுகிறது.  அண்டை மாநிலங்களுக்கு இடையே அருவருப்பு அரசியல் வருந்த வைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Related Stories: