×

‘மலைகளின் இளவரசி’ இழந்தாள் ரூ.700 கோடி: சுற்றுலாத்தொழில்கள் விவசாயம் கடுமையாக பாதிப்பு

கொடைக்கானல்: கொளுத்தும் வெயிலில் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக கழிக்க, இயற்கை நமக்களித்த அரிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்று கொடைக்கானல். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை, பள்ளத்தாக்குகள், மேகம் கொஞ்சி விளையாடும் மலைகள் என பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குளுகுளு பூமி, ‘சீசன் ரெடி... வாங்க.. வாங்க...’ என்று அழைத்தாலும், யாரும் போவதாக இல்லை.  காரணம் உங்களுக்கு தெரியாததா? கொரோனா வைரஸால், சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு 2 மாதங்களாகி விட்டன. இதனால் வாடகை வாகனங்கள், சுற்றுலாத்தல கட்டணம், விடுதிகள், உணவகங்கள், படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு உள்ளிட்ட சுற்றுலாவை மையமாக கொண்டுள்ள தொழில்கள் செயலிழந்ததால், சுமார் ரூ.700 கோடி வரை வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமங்களில் விளைந்த காய்கறிகளையும் விற்க வழியின்றி விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எப்போதுமே சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். அதுவும் சீசன் நேரங்களில் கூட்டம் களைகட்டும். போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பரிதவிக்கும். ‘சீசன் டைம்ல நான் ரொம்ப பிஸி...’ என கெத்து காட்டும் கொடைக்கானல், இன்று சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் சிங்கிளாக பரிதவிக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மூடப்பட்டு, சுமார் 2 மாதங்களாக சுற்றுலாத்தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் ஏப்ரல், மே மாத குளுகுளு சீசனில் சுற்றுலாப்பயணிகளின் வருகை பல லட்சத்தை தாண்டும். இந்த மாதங்களில் நடக்கும் சுற்றுலா தொழிலை மட்டுமே வைத்து, அடுத்த 10 மாதங்களையும் கடத்தி விடலாம் என்றால், எந்தளவிற்கு வர்த்தகம் நடக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 2018ம் ஆண்டு கொடைக்கானலில் கஜா புயலால் கடும் சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் சேதமடைந்தன. அதன் தாக்கமே இதுவரை தீராத நிலையில் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் கோரத்தாண்டவமாடி விட்டது.

கொரோனா தடுப்பு ஊரடங்கால் கொடைக்கானலே முடங்கி போய் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். கொடைக்கானலை பொறுத்தவரை தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன ஓட்டிகள், கைடுகள், சிறு- குறு வியாபாரிகள் என சுற்றுலா தொழில்கள்தான் பிரதானமாக உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் இதில் ஈடுபட்டுள்ள பல ஆயிரம் குடும்பங்கள் வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் ஏற்கனவே கஜா புயல் தாக்கம்  காரணமாக முடங்கிய போயிருந்த சுற்றுலா தொழில் தற்போது கொரோனா தொற்றால்  அதலபாதாளத்திற்கே சென்று விட்டது. அனைத்து சுற்றுலாத்தொழில்களிலும் சுமார்  ரூ.700 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு தனிகவனம் செலுத்தி  சுற்றுலா தொழிலை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  குறிப்பாக சுற்றுலா வாகனங்களுக்கு அரசு விதிக்கக்கூடிய கட்டணங்களில்  இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நகராட்சியின் வரி வசூல், வாடகை  கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கோடை  விழாவை நடத்தலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர்கால சுற்றுலா  விழாக்களை நடத்தலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே  கொடைக்கானலில் சுற்றுலா தொழில் மெல்லமெல்ல புத்துயிர் பெற்று, அதில்  ஈடுபட்டுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும்,  ஏற்புடையதாகவும் இருக்கும்’’ என்றனர்.

கூடுதல் ‘துட்டு’ இந்தாண்டு ‘கட்’: பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கோடைசீசனில் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சிக்கு ரூ.12 லட்சம் வரை செலவிடப்பட்டது. இதை சுமார் 6 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றதில் ரூ.1 கோடியே 26 லட்சம் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு பூங்காவில் புதிய ரகங்கள், மலர் பாத்திகள் அமைப்பதற்கு இதுவரை ரூ.6 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால் கோடைவிழா இதுவரை நடக்காததால் கூடுதல் வருவாய் கிடைக்குமா என தெரியவில்லை. ஆண்டுதோறும் இந்த வருமானத்தை வைத்துதான் பிரையண்ட் பூங்கா மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த வருவாய் கேள்விக்குறியாகி உள்ளது’’ என்றார். தொழிலோ தித்திப்பு முடங்கியதால் பரிதவிப்பு:ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் சங்க தலைவர் அப்பாஸ் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பில் 5 நிறுவனங்களும்,  விற்பனையில் சுமார் 150 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கோடைகால சீசனில் சாக்லேட், யூகலிப்டஸ் தைலம், தேன் விற்பனை வருவாய் என வியாபாரிகளுக்கு ரூ.5 கோடி வரை கிடைக்கும். இதில் சாக்லேட் மட்டும் 10 டன் விற்கப்பட்டு சுமார் ரூ.3 கோடி வரை கிடைக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கால் தயாரிப்பின்றி 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களுக்கு சப்ளை ஆகாததால் வியாபாரிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே அரசு சாக்லேட் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

வாழ்விழந்து தவிக்கிறோம் வாடகை தள்ளுபடி செய்யலாமே?: பிரையண்ட் பூங்கா பகுதி சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் கூறுகையில், ‘‘கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அப்பர்லேக், கலையரங்கம் பகுதிகளில் சிறு வியாபார கடைகள் 500க்கும் மேற்பட்டவை உள்ளன. சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் இல்லாததால் ரூ.50 கோடி நஷ்டமடைந்து வாழ்வை இழந்து தவித்து வருகிறோம். இந்த நேரத்திலும் நகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு பரிசீலனை செய்து 6 மாத வாடகை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

சுழலாத வாழ்க்கை சக்கரம்..
கொடைக்கானல் ஏரி, பைன் மர காடுகளில் ஷிப்ட் முறையில் குதிரை சவாரி மூலம் சுமார் 300 பேர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களது வாழ்வும் முடங்கி குதிரைக்கு கொள்ளு உட்பட தீனி வாங்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஏரி சாலையில் ரைடிங் செல்ல சைக்கிள்களை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்களின் வாழ்க்கையும் சுழலாமல் அதே இடத்தில் நிற்கிறது. இதேபோல் ஏரியில் படகுகளை இயக்குபவர்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது.

வி(டு)தி விளையாடியது...
கொடைக்கானலில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் கடந்த ஆண்டே ஐகோர்ட் உத்தரவுப்படி பூட்டி சீல் வைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளும் தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கின்றன. இதனால் இங்கு பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதை மீட்டெடுப்பதற்கு ஒரு ஆண்டாவது ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சுமார் 200 உணவகங்களில் பணிபுரிந்த 1,500க்கும் மேற்பட்டோரும் தற்போது தாங்கள் உண்ண கூட உணவின்றி தவிக்கின்றனர். மேலும் சிறிய விடுதிகளை வாடகைக்கும், குத்தகைக்கும் எடுத்து நடத்துபவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘வாழ்க்கையை ஓட்ட கடனுதவி வேண்டும்’
டாக்ஸி ஓட்டுனர்கள் சங்க தலைவர் ரமேஷ் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சுமார் 700 பேர் உள்ளோம். சுற்றுலா பயணிகளே வந்தால்தான் எங்களுக்கு வருமானமே கிடைக்கும். ஆனால் கடந்த 2 மாதங்களாக அது முற்றிலும் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுக்கு அரசு வங்கிகள் மூலமோ, வேறு வழிகளிலே கடன் உதவி செய்வதுடன், நல வாரியங்கள் மூலம் நிவாரண உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

படகு லாபம் 10 லட்சம் போச்சு
நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் நகராட்சி சார்பில் 17 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் இந்த படகுகள் மூலம் சுமார் ரூ.10 லட்சம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு அந்த வருவாய் இல்லாமல் போய் விட்டது’’ என்றார்.

எங்கே செல்லும் இந்தப்பாதை...
கொடைக்கானலில் மற்றுமொரு முக்கியமான தொழில் சுற்றுலா வாகனம். சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள், டிராவல்ஸ் ஓட்டுனர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிழைப்பை நடத்தி வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வராததால் இவர்களும் தொழிலும் அடியோடு முடங்கி வாழக்கையை ‘ஓட்ட முடியாமல்’ தவிக்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களுக்கு கடன் தொகையை கட்ட முடியாமலும் தவித்து வருகின்றனர்.

வழிகாட்ட யாருமில்லை...
இதேபோல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என சகல மொழிகளில் பேசி சுற்றுலாப்பயணிகளுக்கு இடங்களை சுற்றி, காண்பிக்கும் வழிகாட்டிகள் (கைடு) 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரமும் ‘வலி நிறைந்ததாகவே’ மாறி விட்டது. இயற்கை கொஞ்சும் இடங்களில் சுற்றுலாப்பயணிகளை அழகாக புகைப்படம் எடுத்து சம்பாதிக்கும் 100க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களும் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘இனிக்காத’ தொழில்...
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை நம்பி சிறு, குறு வியாபாரிகள் சுமார் 2,000  கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களும் கோடைசீசனில்தான் பெரும் கல்லா கட்டி  அடுத்த 10 மாதங்களை கடத்துவர். ஆனால் தற்போது 2 மாதங்களும் ஏறக்குறைய  முடிந்து போய்விட்ட நிலையில் இந்த ஆண்டு முழுவதும் இவர்கள் வாழ்க்கையை  சமாளிப்பது பெரும் சவாலாகத்தான் இருக்க போகிறது. இதேபோல் தித்திக்கும் ஹோம்மேட் சாக்லேட், மருத்துவ குணம் வாய்ந்த யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் தொழிலும் முடங்கி பல நூறு குடும்பங்கள் பசியில் தவித்து வருகின்றனர். மேலும் இதன் வியாபாரமும் முற்றிலும் முடங்கியுள்ளதால் லட்சக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

வரிகளை தள்ளுபடி செய்து வாழ்வாதாரம் காக்குமா அரசு?
ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க செயலாளர் அப்துல்கனி ராஜா கூறுகையில், ‘‘கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பித்தான் அனைத்து தரப்பு தொழில்களும் உள்ளன. காரணம் இங்கு வேறு எந்த தொழிற்சாலையும் கிடையாது. ஏற்கனவே கோர்ட் உத்தரவால் 315 ஓட்டல்கள் மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலையிழந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் எஞ்சியுள்ள ஓட்டல்களும் மூடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுபோல் உரிமையாளர்களின் நிலையும் மோசமாக நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த சீசன் இழப்பு இதுவரை ரூ.700 கோடி வந்து விட்டது. இதை ஈடு செய்ய முடியுமா என தெரியவில்லை. எனவே அரசு தொழில் வரி, சொத்துவரி, மின்கட்டணம், ஜிஎஸ்டி பிடித்தம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் இரண்டாம் சீசன் காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கோடைவிழாக்களை நடத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Mountains ,Rs ,Princess , Princess , Mountains lost, Rs
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்