தமிழகத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் ஏலம் மூலம் விற்பனை: டுவிட்டரில் #TTDForSale ஹெஷ்டேக் டிரென்டிங்...!

திருமலை: தமிழ்நாட்டில் உள்ள திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான ரூ.1.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்யும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #TTDForSale ஹெஷ்டேக் டிரென்டிங் ஆகி  வருகிறது. இந்தியாவின் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்காக மே 20ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை ஆன்லைன் மூலம் செலுத்தி  வருகின்றனர்.

இதற்கிடையே, ஏழுமலையானுக்கு தமிழக பக்தா்கள் காணிக்கையாக சமா்ப்பித்த விவசாய நிலங்கள், வீடு, காலி மனைகள் ஆகியவை குடியாத்தம், விழுப்புரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. அவற்றை ஏலம் மூலம் விற்பனை  செய்வது என்று, கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி கூடிய தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஏலம் தொடா்பான அறிக்கையை தேவஸ்தான அதிகாரி வி.தேவேந்திர ரெட்டி கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி  வெளியிட்டார்.

நில விற்பனைக்கான ஏலத்தை நடத்த இரு குழுக்களை தேவஸ்தானம் நியமித்துள்ளது. நில விற்பனைக்கான ஏலத்தை நடத்தி, அதிக விலை கோருபவர்களுக்கு நிலத்தை விற்று, அத்தொகையை தேவஸ்தானக் கணக்கில் வரவு வைக்கும்  பொறுப்பு இந்தக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சொத்துகளை ஏலம் மூலம் விற்பது வழக்கமான நடைமுறைதான் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இணையவாசிகள் டுவிட்டரில் #TTDForSale என்ற ஹெஷ்டேக்கை டிரென்டிங் செய்து வருகின்றனர். தற்போது, இந்த ஹெஷ்டேக் இந்தியளவில் 2-வது இடத்தில் உள்ளது. இதனைபோல், 8 முக்கிய துறைகள் தனியாரிடம் மத்திய அரசு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: