×

கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே ஷிப்டாக வகுப்புகள் நடக்கும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி:  தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் போதிய கட்டிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், 2 ஷிப்டாக நடக்கும் பாட வகுப்புகள் இனிவரும் காலங்களில் ஒரே ஷிப்டாக மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் நேற்று அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி: சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம், வரும் 27ம் தேதி நிறைவடைகிறது. புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள 3 உறுப்பினர்களும், வரும் 31ம்தேதி வரை துணைவேந்தர் விண்ணப்பங்களை பெறுவார்கள். அதன் மீது ஆய்வு மேற்கொண்டு, பெயர் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்படி ஆளுநர் சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்து அறிவிப்பார்.

கிராமப்புறங்களில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவை படிக்க, தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, இதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவும், ஒரு நாளைக்கு 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.தற்போது அரசு கல்லூரிகளில் போதுமான அளவு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், தேவையான கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அரசு கல்லூரிகளில் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் வகுப்புகள் செயல்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags : KP Anbhagan ,Science Colleges ,Interview ,KP Anbazhagan , Minister of Arts and Sciences, Corona, Curfew and Minister KP Anbazhagan
× RELATED தனியார் பள்ளிகள் ஆன்லைனில்...