பயணிகள் வசதிக்கு முதல் கட்டமாக தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள்: திருச்சி, மதுரை, கோவையில் இருந்து இயக்க திட்டம்

* அரசு கோரிக்கையை ஏற்று ரயில்வே பரிசீலனை

சென்னை: சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் முதல் கட்டமாக 4 சிறப்பு ரயில்கள் 5 வழித்தடங்களில் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி 4 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

அதன்படி நாடு முழுவதும் கடந்த மே 1ம் தேதியிலிருந்து 2,317 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 31 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 12ம் தேதி டெல்லியில் இருந்து 15 சிறப்பு ராஜ்தானி ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 200 ரயில்களை முக்கிய நகரங்களுக்கிடையே இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து, டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியது. இந்த 200 ரயில்கள் வரும் ஜூன் 1 ம் தேதி முதல் இயக்கப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு கடந்த வியாழக்கிழமை  தொடங்கியது. அனைத்து பயணிகளும் இ-டிக்கெட் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து அந்த ரயிலில் பயணிக்க இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரத்து 219 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஏறக்குறைய 12 லட்சத்து 54 ஆயிரத்து 706 பயணிகள் மே 21ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் அதிகமான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் உள்ளிட்ட பிற வழக்கமான பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் அடுத்த உத்தரவுகள் வரும் வரை ரத்து செய்யப்படும். தற்போது இயக்கப்படும் ரயில்கள் ஏசி அல்லாத வகுப்புகளைக் கொண்டதாக இருக்கும். அனைத்து இருக்கையும் முன்பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்.

பொது பெட்டியில் அனைத்து பயணிகளுக்கும் உட்கார இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். முன்பதிவு செய்யாத பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சாதாரண கட்டணம் மட்டுமே இருக்கும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். எந்த ரயில் நிலையத்திலும் முன்பதிவு கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது. முகவர்கள் (ஐ.ஆர்.சி.டி.சி முகவர்கள் மற்றும் ரயில்வே முகவர்கள்) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படாது. முன்பதிவானது அதிகபட்சம் 30 நாட்கள் முன்னதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள விதிகளின்படி ஆர்.ஏ.சி மற்றும் காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும். ஆனால் காத்திருப்பு பட்டியல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது.

பயணத்தின் போது எந்தவொரு பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கப்படாது. இந்த ரயில்களில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு அனுமதிக்கப்படாது. திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைன் நடப்பு முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து பயணிகளும் கட்டாயமாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிறப்பு சேவைகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பயணிகள் குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். பயணிகள் ரயில் நிலையத்திலும் ரயில்களிலும் சமூக இடைவெளியை கவனிக்க வேண்டும். கொரோனா அறிகுறி காரணமாக குறிப்பிட்ட பயணி ரயிலில் பயணிப்பதற்கான வாய்ப்பை இழக்கும்பட்சத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி பணம் திருப்பி தரப்படும்.

ஒருவேளை பெட்டியில் ஒரு பயணிக்கு நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்டால், மற்ற பயணிகள் அனைவரும் அவருடன் பயணிக்க விரும்பவில்லை எனில், அனைத்து பயணிகளுக்கும் முழு பணம் திரும்பத் தரப்படும் என்ற விபரத்தையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்கள் பட்டியலில் தமிழகத்துக்கான சிறப்பு ரயில்கள் எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்துக்கு ரயில்கள் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இதனால், தமிழகத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் ஆட்டோக்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவையை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதைதொடர்ந்து சென்னையைத் தவிர(சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம்) திருச்சி, விழுப்புரம், காட்பாடி, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள வழித்தடங்கள் வழியாக குளிர்சாதன வசதி இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

 அந்த கடிதத்தில் கோவை- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12084,12083) ஜனசதாப்தி ரயில்களும், சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635, 12636) மதுரை- விழுப்புரம் இடையேயும், அதைப்போன்று திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் (22627,22628) திருச்சி-நாகர்கோவில் இடையேயும், கோவை- சென்னை இடையே இயக்கப்படும் ரயில் (12679, 12680) கோவை-காட்பாடி இடையே இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு தெற்கு ரயில்வே சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து மற்ற மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது போல் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் விரைவில் குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1ம் தேதிக்கு பின் அனுமதி?

இதுவரை சென்னையைத் தவிர மாவட்டங்களுக்குள் மட்டுமே பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த ரயில்கள் இயக்க தமிழக அரசு அனுமதி கேட்டதன் மூலம் சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்குள்  செல்ல ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: