×

சென்னை தவிர தமிழகம் முழுவதும் சலூன், பியூட்டி பார்லர்கள் இன்று திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையை தவிர தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இன்று முதல் திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து,  சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இன்று (24ம் தேதி) முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. அங்கிருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் இன்று முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இங்கு பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை அனுமதிக்கக்கூடாது.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Salon ,Tamil Nadu Salon ,Tamil Nadu , Chennai, Tamil Nadu, Saloon, Beauty Parlor, Government of Tamil Nadu
× RELATED வெட்டிவிடுவோம்... ஆனா... தலைமுடிய...