×

பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் தேவையான மருத்துவ உபகரண வசதியை ஏற்படுத்த வேண்டும்: தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை: எஸ்விஎஸ் ஏஏபி தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் பேருந்தின் உள்ளே பொதுமக்கள் எப்படி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பயணிகள் பின்பற்றவும், தொற்று நீக்கி கரைசலை கைகளில் தெளித்துவிடவும் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகர போக்குவரத்தில் ஒருநாள் பயணச்சீட்டு, மாதாந்திர பயணச்சீட்டு மட்டும் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு வழங்க அதிகமான இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேருந்தில் பயணச்சீட்டு வழங்க அனுமதிக்கக்கூடாது. மற்ற மாவட்ட போக்குவரத்தில் அச்சடிக்கப்பட்ட பயண சீட்டு முழுவதுமாக தவிர்க்கப்பட வேண்டும். பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் பயண சீட்டு வழங்கப்பட வேண்டும். பேருந்தில் டிக்கெட் வெண்டிங் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  பயணிகளை ஒழுங்குபடுத்தவும், நிர்ணயிக்கப்ட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்வதை உத்தரவாதப்படுத்தும் வகையில் காவலர்கள், ஊர்க்காவல் படையினரை பயன்படுத்த வேண்டும்.
தேவையான சானிடைசர், மாஸ்க், கையுறை, தண்ணீர் வசதி அனைத்து பேருந்து நிலையங்கள், பணிமனைகள் மற்றும் பேருந்தின் உள்ளே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்க  அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேருந்து நிலையங்கள், பணிமனைகள், பணியாளர்கள் ஓய்வறைகள் தினமும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பணி கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள். அனைவருக்கும் முறையான மருத்துவ காப்பீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : bus stations ,workshops ,urge unionists , Bus Stations, Workshops, Medical Equipment, Trade Unions
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை