புதுச்சேரி முதல்வர்-சுகாதாரத்துறை மாறுபட்ட கருத்து; சிவப்பு மண்டல அறிவிப்பில் குழப்பம் நீடிப்பு: பதற்றத்தில் பொதுமக்கள், வியாபாரிகள்

புதுச்சேரி: புதுச்சேரியை சிவப்பு மண்டலமாக அறிவிப்பதில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் மாறுபட்டு கருத்து நிலவுவதால் மீண்டும் முடக்கம் நடவடிக்கை பாயலாம் என்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பதற்றத்தில் உள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் மார்ச் 25ம்தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 4ம் கட்ட ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பெரும்பாலான தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் தளர்வு அளிக்கப்பட்டு கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநில வருவாயை அதிகரிப்பதற்காக பல்வேறு முட்டுக்கட்டைகளை சமாளித்து மதுக்கடைகளை திறக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் உள்ளூர் மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்பை சந்திக்கவில்லை. மாறாக வெளியூர்களில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதாக மாநில சுகாதாரத்துறை கூறிவருகிறது.

இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலை பகுதியைச் சோ்ந்த நபரின் 9வயது மகன், குருமாம்பேட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் 20 வயது சகோதரர் மற்றும் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த 25 வயது நபர்,

தர்மாபுரியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி புதுவையில் கொரோனா தொற்றுக்காக தனிவார்டில் சிகிச்சை

பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இ்ன்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வடமங்கலம், குரும்பாபேட் மற்றும் வேல்முருகன் நகரை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா,

இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் மத்திய அரசின் வரையறையின்படி 15 நோயாளிகள் உள்ள பகுதி மற்றும் ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் எந்த பகுதியில் உள்ளனரோ அதை சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்க கூறியதன் அடிப்படையில் புதுச்சேரி சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளதாக தொிவித்தனர். ஆனால் இதை உடனடியாக மறுத்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறுகிறது என்பது தவறான தகவல். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலமாக பிரிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பெரியளவில் இல்லை.

வெளியூர்களில் இருந்து வருபவர்களால்தான் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றார். இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலம் தொடர்பான அறிவிப்பில் சுகாதாரத்துைற மற்றும் மாநில முதல்வரின் கருத்தால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள தளர்வுகளில் பெரும்பாலானவை விலக்கப்படும். அத்தியாவசிய கடைகள் தவிர மீண்டும் அனைத்தும் மூடப்படும். பஸ், ஆட்டோ போக்குவரத்து சேவை நிறுத்தப்படும். அப்படி இருக்கையில் மாநில முதல்வரை இதுதொடர்பாக கலந்தாலோசிக்காமல் மாநில சுகாதாரத்துறை அவசரமாக புதுச்சேரியை சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

என்று பொதுமக்களும், வியாபாரிகளும் சரமாரி கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முடங்கியிருக்கும் நிலையில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் தங்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக வணிகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போதுதான் சுகாதாரத்துறை நடவடிக்கையின் மீது சில சந்தேகங்கள் எழுவதாக அவர்கள் ஐயம் தெரிவிக்கின்றனர். மேலும் முதல்வர் நாராயணசாமி உடனடியாக கொரோனா தொற்று பாதித்து கதிர்காமம் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனைபேர் என்பதை பார்வையிட வேண்டும்.

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர். மக்களின் பிரதிநிதியான முதல்வர் நாராயணசாமி இவ்விவகாரத்தில் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர். கொந்தளிப்பில் காங். நிர்வாகிகள்:  புதுச்சேரி சிவப்பு மண்டல அறிவிப்பு விவகாரத்தில் முதல்வருக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. இதனால் இவ்விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்திலும் புயலை கிளப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோருக்கு புகார் கடிதம் எழுதி முறையிட தயாராகி வருகின்றனர்.

மீண்டும் முழு ஊரடங்கு?

புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக கூறிவரும் சுகாதாரத்துறை சிவப்பு மண்டலமாக நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதை முதல்வர் ஏற்காத நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை உயர்மட்ட அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவ்விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக பெற்று புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Related Stories: