×

பேய்க்குளம் பகுதியில் சூறைகாற்றில் 12 ஆயிரம் வாழைகள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் அம்பன் புயல் காரணமாக வீசிய  சூறாவளி காற்றில்  12 ஆயிரம் வாழைகள் சேதமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதையொட்டி பல இடங்களில் வாழைகள்  சேதமடைந்துள்ளன. சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், மீரான்குளம், சேரக்குளம், உள்ளிட்ட பகுதியில்வீசிய  சூறைக்காற்றால் பயிரிடப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் வாழைகள் சரிந்து  பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பேய்க்குளம் முருகேசன் என்பவரது தோட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம்  வாழைகள், மீரான்குளம் கோயில்ராஜ் என்பவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1000 வாழைகள், சேரக்குளம் ராமர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 400 வாழைகள்  சேதமாகியுள்ளது. இந்த ஊரடங்கையொட்டி பல இன்னல்களுக்கிடையே பயிரை பாதுகாத்து வந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதமான வாழைகளை ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை அலுவலர்கள், பேய்க்குளம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன் கூறுகையில் ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து  தவித்து வருகின்றனர். இந்நிலையில்  அம்பன் புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்றில் பல வாழைகள் சேதமடைந்துள்ளது. எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : area ,Bayaykulam , Haunted pool, tornado, banana damage
× RELATED சேரன்மகாதேவி, தூத்துக்குடி பகுதியில்...