×

கொரோனா பரவல் எதிரொலி; உலகம் முழுவதும் சுமார் 8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட முடியாமல் தவிப்பு; உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கொரோனா வைரஸ் பிரச்னையால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசி போட முடியாமல் தவித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நோய் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றன. அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதனால், பலரும் அத்யாவசிய தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு கூட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. சில நாடுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இந்த பிரச்னை உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு கூறியதாவது; யுனிசெஃப், காவி மற்றும் சபின் தடுப்பூசி நிறுவனம் இணைந்து சேகரித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: குறைந்தது 68 நாடுகளில் வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் கணிசமாக தடைபட்டுள்ளது, மேலும் இந்த நாடுகளில் வாழும் 1 வயதுக்குட்பட்ட சுமார் 80 மில்லியன் (8 கோடி) குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்தம் 129 நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்ததில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட (53 சதவீதம்) நாடுகள் கடந்த மார்ச், ஏப்., மாதங்களில் தடுப்பூசி சேவைகளை மொத்தமாக நிறுத்தி வைத்ததாக அறிவித்துள்ளன. கொரோனா பரவலால், பிறந்து ஓராண்டு வரையில் குழந்தைகளுக்கு எபோலா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், போலியோ போன்ற நோய்களை தடுக்க வழக்கமான தடுப்பூசிகள் போடப்படுவது குறைந்துள்ளதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : children ,World Health Organization ,Corona , Corona, World, Children, Vaccines, World Health Organization
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்