தமிழகத்தில் இன்று 9 இடங்களில் சதத்தை தாண்டிய வெயில்; 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்  தாண்டியது. அரக்கோணம், திருத்தணியில் இன்று அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. ஆம்பன் புயல் கரையை கடந்த நிலையில், வங்கக்கடலும், அரபிக்கடலும் இயல்பான தட்பவெட்ப நிலைக்குமாறி வருகின்றன.. இந்த புயல் உருவானபோது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட, வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில், 5 நாட்களாக கடுமையான வெப்ப காற்று வீசி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று 2 நாட்களுக்கு முன்பேயே வானிலை மையம் எச்சரித்தும் இருந்தது.. அதன்படி இன்றும் தமிழக வட மாவட்டங்களுக்கு வறண்ட வானிலை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்  முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை (107 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகக் கூடும். எனவே, அடுத்து வரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

100 டிகிரி ஃபாரன்ஹீட்  தாண்டிய இடங்கள்

* திருத்தணி - 109.4

* வேலூர் - 107.6

* திருச்சி - 106.7

* மதுரை விமான நிலையம் - 106.16

* கரூர் பரமத்தி - 105.08

* சேலம் - 102.9

* நாமக்கல் - 102.2

* மீனம்பாக்கம் - 101.8

* பாளையங்கோட்டை - 101.3

* தருமபுரி - 100.4

Related Stories:

>