×

நடமாடும் வாகனத்தில் கேக் வாங்கி சாப்பிட்ட 15 சிறுவர், சிறுமிகள் வாந்தி மயக்கம்: விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடமாடும் வாகனத்தில் கேக் வாங்கி சாப்பிட்ட 15 சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதி கிராமங்களில் பேக்கரி நிறுவனம் ஆட்டோ மூலம் கேக், பப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பொய்கை அரசூர் மாரியம்மன் கோயில் தெருவில் 15 சிறுவர், சிறுமிகள் ஆட்டோவில் வந்த கேக்குகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் 1 மணி நேரத்தில் கேக் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த நிலையில் இரவு வாந்தி, மயக்கம் தொடரவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு 11 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 15 பேரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தில் கேக் விற்ற பேக்கரி நிறுவனம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் செயல்படுவது தெரியவந்தது. சுகாதாரமற்ற முறையில் கேக் தயாரித்து விற்பனை செய்ததால் சிறுவர் சிறுமியருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பேக்கரி கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடமாடும் வாகனத்தில் கேக் வாங்கி சாப்பிட்ட 15 சிறுவர், சிறுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : children ,girls ,Villupuram 15 Children and Girls Vomiting , Walking vehicle, gay, children, little girls, vomiting, villupuram
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்