×

குமரியில் இருந்து நெல்லை வழியாக 2 ரயில்கள் வட மாநிலங்களுக்கு இயக்கம்

* அகமதாபாத் சிறப்பு ரயில் நேற்று மாலை வந்தது
* 3 எக்ஸ்பிரஸ் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: குமரியில் இருந்து நெல்லை வழியாக இரு ரயில்கள் நேற்று வடமாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 494 பயணிகளோடு சிறப்பு ரயில் நேற்று நெல்லை வந்து சேர்ந்தது. நேற்று மாலையில் 3 ரயில்கள் வருகை காரணமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து பல்வேறு ரயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த சில நாட்களாக சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை வழியாக நேற்று இரு ரயில்கள் வடமாநிலங்களுக்கு சென்றன. கன்னியாகுமரியில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒரு சிறப்பு ரயில், நெல்லை வழியாக சென்றது. இந்த ரயிலுக்கு நெல்லையில் நிறுத்தம் இல்லை. இருப்பினும் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 104 ராஜஸ்தான் தொழிலாளர்கள் நேற்று 3 பஸ்களில் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ஜெய்ப்பூர் ரயில் ஏறி சொந்த ஊருக்கு சென்றனர்.

நேற்று மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் நெல்லை ரயில் நிலையத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 554 பேர் ஏற்கனவே அமர்ந்திருந்தனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர், ெதன்காசி மாவட்டத்தை சேர்ந்த 45 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 312 பேர் உள்பட மொத்தம் 870 பேர் நெல்லை ரயில் நிலையத்தில் ஏறினர்.
நெல்லை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு ரயிலில் ஏற்றப்பட்டனர். பின்னர் மொத்தம் 1424 பயணிகளோடு சிறப்பு ரயில் ஜார்கண்ட் புறப்பட்டு சென்றது.
இதை தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நெல்லை ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 280 பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 46 பேர், குமரி மாவட்டத்தை சேர்ந்த 87 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 81 பேர் உள்பட 494 பேர் இறங்கினர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் சித்த மருத்துவக்கல்லூரியிலும், அரசு பொறியியல் கல்லூரியிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மற்ற பயணிகள் அந்தந்த மாவட்டத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று மாலையில் 3 ரயில்கள் வருகை காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கம்போல த.மு.சாலை மற்றும் ரயில்வே பீடர்கள் சாலைகள் மூடப்பட்டன. குஜராத் ரயிலில் இருந்து பயணிகளை ஏற்றி செல்ல 5 அரசு பஸ்கள் நே ற்று மதியம் 1 மணி முதலே அங்கு காத்து கிடந்தன. குஜராத் ரயில் தாமதம் காரணமாக அரசு பஸ்கள் ரயில்வே பீடர் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு பின்னரே அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றன.

Tags : Kumari ,states ,Northern ,Northern States , 2 trains , Kumari, Northern states
× RELATED ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள...