அழகப்பா பல்கலை., மாணவர்கள் உருவாக்கம் சென்சார் கிருமிநாசினி வழங்கும் கருவி: துணைவேந்தர் பாராட்டு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில் மற்றும் கண்டுபிடிப்பு முனையத்தின் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இணைந்து கொரோனா நோய் தடுப்பு வழிமுறையில் ஒன்றான சென்சார் அடிப்படையிலான தொடுதலற்ற கிருமிநாசினி வழங்கும் கருவியினை உருவாக்கி உள்ளனர். இதனை துணைவேந்தர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு கூறுகையில், ‘கொரோனா தொற்று பரவல் காலத்தில் கிருமிநாசியினை சரியான அளவில் உபயோகப்பபடுத்துவதன் மூலம் நோய் தொற்றினை குறைக்கும் வழிமுறையாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரே கிருமி நாசினி உபயோகிப்பாரன அனைவரும் தொட்டு உபயோகப்படுத்தும்போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் சமமற்ற அழுத்தங்களினால் சரியான அளவில் கிருமி நாசினியை உபயோகப்படுத்த முடியாமல் வீணாகி விடுகிறது. எனவே இந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில், இப்பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் குறைந்த செலவிலான சென்சார் அடிப்படையிலான தொடுதலற்ற கிருமிநாசினி வழங்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.

Advertising
Advertising

இந்த கருவியின் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகளால் தொடாமல் கிருமி நாசினியினை உபயோக்கி முடியும். ரூசா 2.0 நிதியுதவி திட்டத்தின் கீழ் இப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உபயோகப்படுத்தும் வகையில் இக் கருவியை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் வளாகத்திலும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். திறன்மேம்பாட்டு நிறுவன ஆலோசகர் தர்மலிங்கம், இயக்குநர் இளங்குமரன், உதவி பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில், மாணவ பயிற்றுனர்கள் அழகுராமன், மாரிச்சாமி, மாணவர்கள் அஜய் ரத்தினம், கிருஷ்ணகுமார், அங்கப்பன், மணிபிரசாத், புகழ் ஆகியோர் இந்த கருவியினை உருவாக்கியுள்ளனர். பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: