×

பல கோடி வருவாய் ஈட்டி தந்த திருச்சி விமான நிலையம் தனியார் மயத்தால் 850 பணியாளர் நிலை கேள்விக்குறி: போராட்டம் நடத்த முடிவு

ஏர்போர்ட்: பல கோடி வருவாய் ஈட்டி தந்த திருச்சி விமான நிலையம் தனியார் மயத்தால் 850 பணியளர்களின் நிலை கேள்விக்குறியாகும் என்பதால் இதை எதிர்த்து போராட்டத்தில் குதிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. அந்த பட்டியலில் தற்போது திருச்சி விமான நிலையமும் இணைந்துள்ளது. மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்றுமுன்தினம் இதை முறைப்படி அறிவித்தார். ஏற்கனவே டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட சில விமான நிலையங்களை தனியார் பராமரித்து வருகிறது. தனியார் மயமான பின் திருச்சி விமான நிலைய பராமரிப்புக்கான முதலீட்டை 100சதவீதம் தனியார் நிறுவனமே செய்யும். அதே சமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும். அரசு, தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய பராமரிப்பு பணி நடை பெறும்.திருச்சி விமான நிலையம் கடந்த 1980ல் துவங்கப்பட்டது. தற்போது நிரந்தரமாக அதிகாரிகள், பணியாளர்கள் 150 ேபர், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 700 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர சுங்கப்பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 350 பேர் பணியாற்றுகின்றனர்.

இங்கிருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர் ஆகிய இந்திய பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 2,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர சரக்கு விமான சேவையும் நடை பெறுகிறது.சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கத்தில் தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்த படியாக திருச்சி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்திலேயே இந்த விமான நிலையம் தான் முதன் முதலாக தனியார் மயமாக உள்ளது. விமான நிலையத்தை தனியார் மயமாக்க அதன் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுபற்றி திருச்சி விமான நிலைய பணியாளர் சங்க செயலாளர் யுவராஜேஷ் கூறுகையில், திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க போவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்கான டெண்டர் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. டெண்டர் அறிவிக்கப்படும் போது தான், விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை என்ன என்பது தெரியவரும்.எப்படி இருந்தாலும் தனியார் நிறுவனம் புதிதாக ஆட்களை நியமித்து தான் விமான நிலையத்தை இயக்குவார்கள். இதனால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறிதான்.
திருச்சி விமான நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல லாபத்தில் செயல்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டில் மட்டும் ரூ.40 கோடி வருவாய் கிடைத்தது. அதற்கடுத்த 2ஆண்டுகளிலும் அதை விட கூடுதல் வருவாய் ஈட்டியது. லாபத்தில் இயங்கும் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது முறையல்ல. தனியார் பராமரிப்புக்கான டெண்டர் அறிவித்த பின், அதை எதிர்த்து போராட்டத்தில் குதிப்ேபாம் என்றார்.

விமான போக்குவரத்துக்கு அனுமதி: திருச்சி விமான நிலையம் 2ம் உலக போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. அப்போது போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டது. போருக்கு பின் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1980 களின் ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்டது.சரக்கு முனையமாக இயக்கம்:  இந்த விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளது. ரூ.80 கோடியில் கட்டப்பட்டு, 2009ல் செயல்பட துவங்கிய புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன் படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக இயங்கி வருகிறது.நவீன வசதிகளுடன் ஓடு பாதை: திருச்சி விமான நிலையத்தில் முதலில் குறுக்காக சந்திக்கும் இரண்டு ஓடுபாதைகள் இருந்தன. பின்னர் சிறிய ஓடுபாதையான 15/33 மூடப்பட்டு, அது தரையிறங்கும் விமானங்களை விமான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லும் பாதையாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது இங்கு பயன்பாட்டில் இருப்பது 2480 மீட்டர் நீளமுள்ள 09/27 ஓடுபாதை ஆகும். நீளம் குறைவான இந்த ஓடுபாதையில் ஏர் பஸ் A320, 321, போயிங் 737 மற்றும் ஏடிஆர் ரக சிறிய விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். மேலும் ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான வழிகாட்டி கருவி, இரவு நேரத்தில் தரையிறங்க ஓடுபாதை விளக்குகள் உட்பட அனைத்து நவீன வசதிகளுடன் உள்ளன.

3வது முனையம் கட்டும் பணி தீவிரம்: திருச்சி விமான நிலையத்தில் தற்போது 950 கோடியில் 3வது முனையம் கட்டும் பணி நடந்து வருகிறது. சிறிய ஓடுபாதையை 12,500 அடியாக (3,810 மீட்டர்) உயர்த்துவது, அதிநவீன விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் அமைப்பது, தற்போதுள்ள பயணிகள் முனையத்தை 17,920 சதுர மீட்டராக (192,900 சதுர அடி) விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் 1075 பயணிகளை கையாள்வது, வேறு சிலகட்டடங்கள் கட்டுவது ஆகிய பணிகள் நடைபெறுகிறது. இதற்காக விமான நிலையத்தின் அருகேயுள்ள விவசாய நிலங்கள் மற்றும் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான நிலங்கள் ஆகியனவற்றை கையகப்படுத்தும் பணி மாவட்ட நிர்வாகத்தால் நடந்து வருகிறது. மற்ற பணிகள் நடந்து வந்தாலும், நிலம் கையகப்படுத்தும் பணி மட்டும் மந்தமாக நடந்து வருகிறது.

2ம் நிலைக்கு தரம் உயர்வு: திருச்சி விமான நிலையம் மூன்றாம் தர நிலையில் இரண்டாம் தர நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2019-20 ஆண்டில் திருச்சி விமான நிலையத்தின் மூலம் 8,895 சர்வதேச விமான சேவை, 5,519 உள்நாட்டு விமான சேவை, 69 பிற காரணங்களுக்கான விமான சேவை என மொத்தம் 14,483 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இவ்விமான சேவைகளின் வழியாக 13 லட்சத்து 14 ஆயிரத்து 839 சர்வதேச பயணிகள், 2 லட்சத்து 97 ஆயிரத்து 20 உள்நாட்டு பயணிகள் என 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியதை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலையிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி கடந்த மாதம் தான் இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கம் கடத்தலில் முதலிடம்
தமிழகத்திலேயே தங்கம் கடத்தல் கேந்திரமாக இருப்பது திருச்சி விமான நிலையம் தான். தங்கம் கடத்தி வருபவர்கள் பிடிபடும் நாளே இல்லாத அளவுக்கு கடத்தல் கேந்திரமாக இந்த விமான நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு வருவாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த அதிகாரிகள் விமானத்தில் வந்த 60 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்ததில் ஒரு நாளில் மட்டும் 15 பேரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் திருச்சியில் ஒரு வாரமாக முகாமிட்டு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2018ல் முதல் விபத்து
2018 அக்டோபர் 12ம் தேதி அதிகாலை திருச்சியில் இருந்து 136 பயணிகளுடன் துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விட்டு வானில் பறந்தது. பின்னர் விமானம் அவசர அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. அங்கு பார்த்தபோது, சுவரில் மோதியதால் விமானத்தின் அடிப்பாகத்தில் பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. எந்த அசம்பாவிதமுமின்றி 136 பயணிகளும் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்றே அப்போது பேசப்பட்டது. இதுதான் இந்த விமான நிலையத்தின் முதல் விபத்து என்று கூறப்படுகிறது.


Tags : Trichy Airport Private Limited ,850 Personnel Questionnaire
× RELATED ஊரடங்கால் 2 மாதமாக சுற்றுலா...