×

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், கிருஷ்ணகிரி நகருக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அணை வறண்டதால், 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், நகர மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து, 20 நாட்களாக வறண்டு இருந்த அணைக்கு, நேற்று முன்தினம் 40 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், 12 அடி மண் பகுதியையும் சேர்த்து 16.50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 134 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 19.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் உயர்வதுடன், கிருஷ்ணகிரி நகர மக்களின் குடிநீர் பிரச்னை தீர்வதுடன், விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

Tags : Krishnagiri Dam , Increased,water supply, Krishnagiri Dam
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...