×

நாளை முதல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் நாளை இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : saloon shops ,areas ,Chennai ,Govt ,city ,Tamil Nadu , Permission ,open saloon shops, areas, Chennai police-bound areas ,tomorrow,Tamil Nadu govt.
× RELATED 60 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு