திருவிக நகர், ராயபுரம் மண்டலங்களில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 61 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. மூன்று பேர் நோய் தொற்றால் இறந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் ஒருவர் இறந்தார். பெரம்பூர் தீட்டித்தோட்டம் 7வது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த 14ம் தேதி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 17ம் தேதி அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில்  போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதேபோல், ராயபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது  இளம்பெண் சளி, காய்ச்சல் காரணமாக கடந்த 17ம் தேதி ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில்  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை  பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடல்  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி ராயபுரம் சுடுகாட்டில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

துணை தாசில்தாருக்கு நோய் தொற்று: சென்னை திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில் காவலரின் 19 மற்றும் 16 வயது மகன்கள், காமராஜர் நகர் 2வது தெருவில்  2 வழக்கறிஞர்கள், அழகிரி சாமி தெருவில் கேபிள் டிவி ஆபரேட்டர், கக்கன்ஜி காலனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், அயானவரம் ஞானாம்பாள் 2வது தெருவை சேர்ந்த 50 வயது ரயில்வே பணியாளர், புளியந்தோப்பு கன்னிகாபுரம் நேருநகர், வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 பேர், ஓட்டேரி பகுதியில் 5 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 11 பேர், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் சென்னை மண்டலத்தில் பணிபுரியும் 50 வயது துணை தாசில்தார் என திருவிக நகர் மண்டலத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தாம்பரம்: மேற்கு தாம்பரம் அம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்த 49 வயது ஆண், மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 19 வயது வாலிபர், மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த 81 வயது முதியவர், குரோம்பேட்டையை சேர்ந்த இருவர், தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்த ஒருவர் மற்றும் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புழல்: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் புழல் கதிர்வேடு செம்பியம் செங்குன்றம் சாலையை சார்ந்த 43 வயது நபர், ரெட்டேரி லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த 34 வயது பெண் ஆகியோருக்கு  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்குன்றம் அடுத்த  தீர்த்தங்கரையம்பட்டு கோமதி அம்மன் நகர், பாலவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 20 வயதுபிரசவித்த தாய்க்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி வீட்டில் பணியில் இருந்த 3 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வெளிமாநில நீதிபதி ஒருவர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 9 போலீசாருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களை சுகாத்தாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களுடன் பணியாற்றிய காவலர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் சென்னை காவல் துறையில் நோய் தொற்று 236ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>