×

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ500 நடந்தால் ரூ.100 அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் நடந்து செல்லும் நபருக்கு 100 அபராதமும், வாகனங்களில் செல்லும் நபருக்கு ₹500ம் அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மக்கள் யாரும் முறையாக பின்பற்றாமல் சர்வ சாதாரணமாக வெளியில் திரிந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை இணைந்து நேற்று முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நடந்து செல்லும் நபர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளன.முதற்கட்டமாக சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே மற்றும் பாரிமுனையில் இந்த அபராதம் விதிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாசாலையில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு ₹500ம், நடந்து சென்ற நபர்களுக்கு 100ம் போக்குவரத்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்தனர்.மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உடனிருந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம்  அணியாதவர்கள் மீது  சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. முகக்கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீது மாநகராட்சியை பொறுத்தவரை அபராதம் விதித்து வருகிறது. மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சென்னை முழுவதும் போலீசார் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், என்றார்.

ஒரே நாளில் 10,65,000 வசூல்
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ₹500ம், முகக்கவசம் அணியாமல் நடந்து செல்பவரிடம் ₹100ம் அபராதமாக வசூலிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 2,130 வாகன ஓட்டிகளிடம் 10,65,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Tags : Chennai , Madras, face cover, vehicle, commissioner, corona, curfew
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...