கொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரி வழக்கு: பொதுநல வழக்கு அமர்வுக்கு விசாரணை மாற்றம்

மதுரை:  கொரோனாவிற்கு ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரிய மனு பொதுநல வழக்கினை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் பக்ருதீன்,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா பாதித்தோருக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்ஷனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை பயன்படுத்தலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. தெலங்கானா ஐகோர்ட்டில் நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கு ஆங்கில மருந்துகளுடன், ஹோமியோபதி மருந்தான ஆர்ஷனிகம் ஆல்பம் 30  மருந்தையும் வழங்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நிறைந்தது என்பதால் தமிழகத்தில் சிகிச்ைச பெறுவோருக்கும் ஹோமியோபதி மருந்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங்கில் நேற்று விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘‘மனுதாரர் கோரும் நிவாரணம் பொதுநலன் சார்ந்தது. இதை தனி நீதிபதியால் உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனு பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: