சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பிறகுதான் நிதியமைச்சகம் தமிழக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு எந்த வகையிலும் மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை தடுக்கமுடியாது என்ற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.