கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைனில் மணல் விற்பனை துவங்கியது: லாரி உரிமையாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் ஆன்லைனில் மணல் விற்பனை தொடங்கப்பட்டது.

 கடந்த 11ம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்தி கட்டுமான பணிகள் மேற்ெகாள்ள அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும்  கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டுமான பணிக்கு தேவையான மணலை விற்பனை செய்ய அரசு முன்வரவில்லை. இதனால்,  கட்டுமான பணிகள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்க வலியுறுத்தி  நேற்று காலை 11 மணிக்கு சேப்பாக்கம் மணல் குவாரிகள் செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே, காத்திருக்கும் லாரிகளுக்கு 26ம் தேதியில் மணல்  கிடைக்கும் என்று ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ் உறுதியளித்தார். அதன்பேரில் நேற்று மாலை முதல் ஆன்லைன் மூலம் மணல் முன்பதிவு  செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கட்டுமானப்பணிக்கான அத்தியாவசிய மூலப்பொருள் மணலை வழங்க கோரி  முறையாக ஆன்லைனில் பதிவு செய்து தினமும் பணம் செலுத்தியுள்ளோம். 3 மாதங்களாக மணல் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.  மணலுக்கான எங்களது பணம் லட்சக்கணக்கில் அரசு கஜானாவில் சேர்ந்து விட்டது. ஆனால், 3 மாதங்களாக  அரசு எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

அரசு துரிதமாக மணலை வழங்கி கட்டுமான பணியினை துவங்க தக்க நடவடிக்கை எடுக்க, அதுவரையில் தங்களது அலுவலகத்தில் மணல்  பெறுவதற்காக நாங்கள் பணம் செலுத்திய ரசீதுடன் காத்திருக்க முடிவெடுத்தோம். ஆனால், ஐஏஎஸ் அதிகாரி எங்களது கோரிக்கையை  ஏற்றுக்கொண்டார். தற்போது 8 குவாரிகளில் 3 குவாரிகளில் மணல் விற்பனை தொடங்கியுள்ளது. மற்ற குவாரிகளில் மணல் விற்பனை  தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

Related Stories: