நிலுவையில் உள்ள நெல் அரவை மானியமான 2,609 கோடியை உடனே தர வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கோரிக்கை

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் மத்திய அரசின் நுகர்வோர்  விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக திட்டத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் தமிழக அரசின் உணவு துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

 தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகளை 2.08 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு  இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எம்.ஜி.கே.ஒய். என்ற பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5  கிலோ அரிசி வீதம் 5  லட்சத்து 36 ஆயிரத்து 5 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதில் 5 லட்சத்து ஆயிரத்து 649  மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு எடுத்துக்கொண்டு, ஏப்ரல் மாதத்தில் 96.3 சதவீதம் மற்றும் மே 21ம் தேதிவரை  85 சதவீதம் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. பி.எம்.ஜி.கே.ஒய். திட்டத்தின் கீழ் இதுவரை 150 மெட்ரிக் டன் பதப்படுத்தப்பட்ட துவரம் பருப்பு  அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 ஆயிரத்து 769 மெட்ரிக் டன் பதப்படுத்தாத துவரம் பருப்பை வழங்குவதற்கான உத்தரவை மத்திய அரசு இன்னும்  பிறப்பிக்கவில்லை. தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள நெல் அரவை மானியமான ₹2,609 கோடி தொகையை மத்திய அரசு இன்னும் தரவில்லை.  இந்த தொகையை உடனடியாக அளிக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களாக 4 லட்சத்து 782 பேரை மாவட்ட கலெக்டர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில்  வழங்குவதற்காக 35 ஆயிரத்து 732 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவர்களுக்கு தேவையான 801 மெட்ரிக் டன் முழு  சென்னாவை வழங்க வேண்டும். ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாணையை 2019ம் ஆண்டு செப்டம்பர் 20ம்  தேதியன்று தமிழக அரசு பிறப்பித்தது. இதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு  வடிவமைப்புக்கான பணிகள் வரும் செப்டம்பரில் முடிவடையும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: