தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது

* சென்னையில் 569 பேருக்கு தாக்கம்,

* இறப்பு 98 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக  உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 569 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 185 மாதிரிகள் சோதனை  செய்யப்பட்டுள்ளது. அதில் நேற்று 12,653 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அதிக பட்சமாக சென்னையில் 569 பேர் உட்பட செங்கல்பட்டு 40  பேருக்கும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும், காஞ்சிபுரம் 13,  புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர் 2 பேருக்கும், ராமநாதபுரம் 7 பேருக்கும், திருவள்ளூர் 39 பேருக்கும், தூத்துக்குடி 6 பேருக்கும், திருச்சி 4  என 694 பேருக்கும், இதைப்போன்று வெளிநாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நேற்று மட்டும் தமிழகத்தில் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை 14,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 846 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளர். அதன்படி 7,128  பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,524 ஆக உள்ளது. மேலும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  81 வயது ஆண், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண், தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது  ஆண், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆண் என 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 472 ஆண், 312 பெண், 2 திருநங்கை என  இதுவரை 9,447 ஆண்கள், 5,301 பெண்கள், 5 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 66 பரிசோதனை மையம் செயல்பட்டு வந்த நிலையில்  சென்னையில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு அனுமதி பெற்ற நிலையில் 67 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 503 மாதிரிகளின் முடிவுகள்  வரவேண்டியுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>