ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் சிறப்பு முன்பதிவு கவுன்டருக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை: பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

சென்னை: சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கவுன்டர் திறக்கப்படுவதாகக் கூறிய நிலையில், ஆன்லைனில் அனைத்து  டிக்கெட்டுகளும் புக் செய்ததால் முன்பதிவு கவுன்டருக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பினர். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தாக்கத்ைத ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. வரும்  ஜூன் 1ம் தேதி முதற்கட்டமாக நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னை - டெல்லி ராஜதானி சிறப்பு ரயில்,  ஜூன் முதல் இயக்கப்பட உள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கி விட்டது.  

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு முதலில் ஆன்லைன் மூலம் செய்ய முடியும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ரயில்நிலையங்களில்  உள்ள டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ரயில்களில் முன்பதிவு செய்ய  ஏதுவாக, தற்போது ஜுன் 1 முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிமுதல் குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே  நடைபெறும். அதாவது திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய முன்பதிவு மையங்களில் மட்டும்  குறைந்தபட்சம் 2 கவுன்டர்கள் கொண்டு செயல்படும். இந்த மையங்களில் முன்பு பதிவு மட்டுமே செய்ய முடியும்.

மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்சமயம் திரும்பப் பெற இயலாது.  முன்பதிவு செய்ய கவுண்டர்களுக்கு  வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று  பயணிகள் முன்பதிவு செய்வதற்காக காலை 6 மணி முதலே ரயில் நிலையங்களில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள்   பயணச்சீட்டுகள் அனைத்தும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கவுன்டரில் முன்பதிவு செய்ய முடியாது என்று கூறி  அங்கு வந்தவர்களை கவுன்டர் அருகே கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பிச் சென்றனர்.

Related Stories: