போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு நினைவு இல்லமானது: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று  அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு திடீரென  உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றும், சிகிச்சை  பலன் அளிக்காமல் 2016 டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசு நினைவிடமாக்கப்படும் என்று  கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் அறிவித்தார். இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மன்னார்குடி ஆட்களை  வெளியேற்றிய பின் போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வந்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு அரசுக்கு உரிமையில்லை. இது  எங்களுடைய பூர்வீக சொத்து. எனவே நீதிமன்றத்தை நாடி இந்த சொத்தை மீட்க போராடுவேன்’’ என்று தெரிவித்தார். அதன்படி, அரசின் அறிவிப்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீபாவின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி  நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், ‘ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவதால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே  அவர்களை அப்புறப்படுத்தவோ மறு குடியமர்த்துவதோ மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை. எனவே  மறு குடியமர்வுக்கும் மறுவாழ்வுக்குமான மாற்று இடம் ஏதும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் 3 அடுக்கு  வீடு வளாகத்தில் பலா மரம்-1, மா மரம் -2, தென்னை-5, வாழை மரங்கள்-5 உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில எடுப்பு  நிலங்களின் வரைபடங்கள் (பிளான்) கிண்டியில் உள்ள தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் எப்போது  வேண்டுமானாலும் மக்கள் பார்வையிடலாம்’ என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை  தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கவர்னர் உத்தரவிட்டார். இந்த அவசர சட்டத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 17-8-2017 அன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை,  ஜெயலலிதாவின் சாதனைகளையும், தியாகங்களையும் எடுத்து காட்டும் விதத்தில் நினைவிடமாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்  என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறைக்கு 5-10-2017 அன்று  பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன்படி 28-6-2019 அன்று சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா நிலையத்திற்கு நோட்டீஸ் விடப்பட்டது. 6 -5-2020 அன்று இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் அசையும் பொருட்களான புத்தகங்கள்,  ஆபரணங்கள், இதர பிற அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்படவில்லை. அசையும் சொத்துக்களை அரசாங்கம் வேறு இடத்திற்கு  மாற்ற பொறுப்பெடுத்து கொண்டுள்ளது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் பேரில், வேதா நிலையத்தை தற்காலிகமாக அரசாங்க பொறுப்பின்கீழ் கொண்டு வரவும், அசையும்  சொத்துக்களை அங்கிருந்து மாற்றவும், வேதா நிலையத்தை நினைவிடமாக்க, “புரட்சி தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை”  அமைக்கவும் உத்தரவிட்டு அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வர் இருப்பார். துணை முதல்வர் மற்றும்  செய்தித்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், செய்தித்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்கள். இந்த நினைவு  அறக்கட்டளை, வேதா இல்லத்தில் உள்ள பொருட்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா செல்ல முடியாது

ஜெயலலிதாவும், சசிகலாவும் கடந்த 32 ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். அவர்கள் கடந்த 28 ஆண்டுகளாக ஒன்றாக வேதா  இல்லத்தில் வசித்து வந்தனர். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, சசிகலா பரோலில் வந்தபோது, தி.நகரில் உள்ள உறவினர் வீடுகளில்தான்  தங்கியிருந்தார். வேதா இல்லம் செல்லவில்லை. வேதா இல்லத்தை அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். தற்போது,  வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு சிறையில் இருந்து வெளியில் வரும்போது கூட வேதா இல்லம் செல்ல  முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: