தகவல் பாதுகாப்பு கேள்விக்குறி ஜூம் ஆப்புக்கு தடை வருமா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ஜூம் ஆப்பிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூம் வீடியோ ஆப் மூலமாக மக்கள் பலரும் உரையாடி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இந்த ஆப் பயன்படுத்த எளிது என்பது மட்டுமின்றி, ஏராளமானோர் ஒரே சமயத்தில் வீடியோ கால் பேசவும், அவற்றை ரெக்கார்ட் செய்யவும் என பல வசதிகள் உள்ளன. பல பள்ளிகள் ஜூம் ஆப் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கின்றன.

இந்நிலையில், ஜூம் ஆப்பில் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதில் பொதுமக்களின் தகவல்கள் மூன்றாம் தர நிறுவனங்களுக்கு விற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறி டெல்லியை சேர்ந்த ஹர்னு் சவுக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாஜீ சாபிக் ஆஜராகி, ‘‘இந்த ஆப் தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. இந்த ஆப் மூலமாக நடக்கும் தகவல் திருட்டால் இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன.

பல நாடுகள் ஜூம் ஆப்பை தடை செய்துள்ளன. இந்த ஆப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழு (சிஇஆர்டி) கூட எச்சரித்துள்ளது. எனவே, உரிய சட்டம் இயற்றும் வரை ஜூம் ஆப் இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்தி வைத்தார்.

Related Stories: