கொரோனா பரவுவதை தடுக்கவோ, பொருளாதார நிவாரணங்கள் வழங்கவோ மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை

* சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவோ, பொருளாதார நிவாரணங்களை சரியாக வழங்கவோ மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி பேசிய கருத்துகள் வருமாறு:  நாட்டிலேயே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆரம்பம் முதற்கொண்டே இந்த பிரச்னையை அரசு தாமதமாகவே கையாண்டு வருகிறது. முதலாம் ஊரடங்கு காலகட்டத்தில் பரிசோதனை விகிதம் என்பது பத்து லட்சத்திற்கு 32 பேர்தான் என்கிற அளவில் அவமானகரமாக இருந்தது. தமிழகத்தில் பாஜவின் ‘பிராக்சி’  அரசாக அதிமுக செயல்பட்டு வருவதால், இங்குள்ள நிலைமையும் கொடூரமாக உள்ளது. இந்த பிரச்னையை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், மார்ச் மாதம் இறுதிவரை அனைத்தும் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தது.   தமிழகத்தில் நோய்த்தொற்று ஒவ்வொரு நாளும் 9 சதவீதம் என்கிற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. நோய்த்தொற்றின் தாக்கம் குறையவே இல்லை. மருத்துவப் பிரச்னைகள் மட்டுமின்றி, பொருளாதார பிரச்னைகளும் கவனிக்கப்படவில்லை.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலை என்பது 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவிகிதத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது இரண்டாவது அதிகபட்சமாகும் என்பதோடு தேசிய சராசரியில் இருமடங்காகும்.  இத்தகைய நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக, ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காலகட்டத்தில் திமுகவும், நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு முன்னதாக ‘ஹெல்ப் லைன்’ ஒன்றினை ஏற்படுத்தினோம். உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அந்த எண்ணிற்கு வந்தன. இன்றைய காலக்கட்டத்தில், எந்த அளவிற்கு மக்கள் பரிதவிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அரசு செய்ய வேண்டியவை குறித்து சில கோரிக்கைகளை முன்மொழியக் கடமைப்பட்டுள்ளேன்.

அவை:  கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான யுக்திகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும்.  வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் நேரடியாகப் பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும்.

கொரோனா தொற்று பிரச்னையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தை காணும் போது நெஞ்சம் வலிக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொடூரத்தை  உண்மையிலேயே வென்று விடலாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>