×

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது: ராமதாஸ் அறிக்கை

சென்னை: மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது வட்டித் தள்ளுபடி வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல. கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, ஒத்திவைக்கப்பட்ட 3 மாதத் தவணைகளுக்கு உரிய தொகையை அசலுடன் சேர்த்து, அந்த  தொகைக்கும் கடன் பருவம் முடிவடையும் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன. இப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணை ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருப்பவர்கள், கூடுதலாக ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும். கடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாதக்கடன்  தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல அதற்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்வதும் தான்.

எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். எந்த விதமான கூடுதல் கட்டணமும்  இன்றி மார்ச் 31ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Ramadas , Monthly Loan Installment, Ramadas, Corona, Curfew
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...