நாட்டில் நான்காவது நாளாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் இன்று நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 118447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3583 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 48534 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 3234 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1454 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12905 பேருக்கும், டெல்லியில் 11659 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதார் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி இதுவரை 27,55,714 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 18,287 பரிசோதனைகள் தனியார் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், நாட்டில் இன்று நான்காவது நாளாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>