நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக மக்களின் வாழ்க்கையை தடம் புரள செய்துள்ள கொரோனா இந்தியாவிலும் கோர முகத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,447-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 48, 534-ஆக அதிகரித்துள்ள நிலையில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அளவில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு 41,642 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,454பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் எச்சரித்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என மகாராஷ்டிரா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மும்பை மாநகரம் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக நீடிப்பதால் அங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 13,967 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 12,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை காட்டிலும் 7 மடங்கு அதிகமாக 773 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக தலைநகர் டெல்லியில் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கபப்டுள்ள நிலையில் 194 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 6,227 பேரும் மத்திய பிரதேசத்தில் 5,981பேரும், உத்திரப்பிரதேசத்தில் 5,515 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 3,197, ஆந்திராவில் 2,647, பஞ்சாப்பில் 2,028, தெலுங்கானாவில் 1,699 காஷ்மீரில் 1,446, கர்நாடகாவில் 1,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மிசோரம், அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகளில் யாரும் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நோய் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் மாநிலங்களில் முழுமையான அளவில் ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள அமைச்சகம், இரவு நேர ஊரடங்கை கடுமை படுத்தி நோய் பரவலை தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: