அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி :  அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்கத்தில் அம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்தார். புயல் சேதங்களை பார்வையிட்ட பின், பிரதமர் மோடி முதல்வர் மம்தாவுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி கூறியதாவது,

கடந்த ஆண்டு மே மாதத்தில், நாடு மக்களவை தேர்தல்களில் மும்முரமாக இருந்தது, அந்த நேரத்தில் நாங்கள் ஒடிசாவைத் தாக்கிய ஒரு சூறாவளியை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இப்போது, ஒரு வருடம் கழித்து, அம்பன் புயல், நமது கடலோர பகுதிகளை பாதித்துள்ளது.

*அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பெரும் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.புயல் சேதங்களை சீரமைக்க மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.

*மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு, இந்த கடினமான காலங்களில் முழு நாடும் உங்களுடன் துணை நிற்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்

*அம்பன் புயலால் சேதமடைந்த மேற்கு வங்கத்தை புனரமைக்க ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

*புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதி வழங்கப்படும்.

*தற்போதைய நெருக்கடியான சூழலில் மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

*அம்பன் புயலால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசால் ஒரு குழு மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படும்.

*கொரோனாவுடன் போராடுவதற்கு சமூக இடைவேளி  அவசியமான ஒன்றாகும், அதேசமயம் அம்பன் புயலை எதிர்க்கொள்ள  மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், மம்தா ஜி தலைமையில் மேற்கு வங்க அரசு நன்றாக போராடியது. இந்த பாதகமான காலங்களில் நாங்கள் அவர்களுடன் துணை இருக்கிறோம்

மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் கோர தாண்டவம்

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம்- வங்கதேச கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது. இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.அம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 80 பேர் பலியாகியுள்ளனர். கொல்கத்தாவில் சாலைகள், விமான நிலையம் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. 4 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் நாசமாகின. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவைப் பொருத்தவரை உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், கடலோர கிராமங்களைச் சேர்ந்த 44 லட்சம் பேர் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

பிரதமர் மோடி நேரில் ஆய்வு

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 80 பேரின் உயிரைக் காவு வாங்கி, ஏராளமான சேதத்தை ஏற்படுத்திய அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.அதன்பின் முதல்வர் மம்தா பேனர்ஜியுடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>